அன்னம் மொட்டை தோற்கடிக்கும் :  அடித்துக் கூறுகிறார் ஹசன் அலி !! 

 
(அபு ஹின்ஷா)
 
 
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களில் மனிதாபிமானமாக மக்களோடு சகஜமாக பழகக்கூடியவர் எங்களுடைய வேட்பாளர். அமைச்சராக இருந்து கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களின் பிரச்சினைகளை காலடியிலேயே பேசி தீர்வு தந்த  அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு சகல வகைகளிலும் பொருத்தமானவராக நான் பார்க்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம் ஏ ஹசன் அலி தெரிவித்தார்.
 
இன்று காலை புதிய ஜனநாயக முன்னணியின் சம்மாந்துறை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய எம். எ. ஹசன் அலி அவர்கள் அங்கு மேலும் பேசுகையில்,
 
பிரதேச சபை உறுப்பினராக கூட இருந்திராத மக்களின் அன்றாட பிரச்சினைகளை அணுவளவும் தெரிந்திராத மொட்டின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று இந்த நாட்டை எவ்வாறு சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. ஒருகாலத்தில் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களை கண்டு ஊடகங்கள் தெறித்து ஓடியது. ஆனால் இப்போது தலைகீழாக மாறி ஊடகங்களை கண்டு அவர் தடுமாறிக் கொண்டு பதிலளிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் பக்கத்தில் இருப்பவர்கள் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பதை சமீபகாலத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
 
ஏனைய மாகாணங்களிலும், பிரதேசங்களிலும் தானே நேரடியாக சென்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் தான் நேரடியாக வராமல் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் விதமாக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் தன்னுடைய நண்பர்களையும் அனுப்பி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். ஒரு ஜனாதிபதி தேர்தலில் குடிசையில் வாழ்கின்ற மகன் தொடக்கம் கோபுரத்தில் வாழ்கின்றவர்  வரையிலான வாக்குகள் தேவை. ஆனால் வடகிழக்கில் வாழ்கின்ற மக்களின் வாக்கு தேவையில்லை என்று புறக்கணித்து கோத்தாபய ராஜபக்ச அவர்கள் செயற்படுவதை நாங்கள் எல்லோரும் கவனத்திற்கொண்டு ஏழைகளின் பசியை அறிந்த எம்மோடு நெருங்கிப் பழகுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஆளுமையற்ற கோதாபய ராஜபக்ஷ அவர்கள் படுதோல்வி அடைந்து எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.
 
நாங்கள் தற்போது எதிர் கொள்வது ஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சார்ந்த கட்சிகளே எதிர்வருகின்ற 2020 ஆம் ஆண்டில் நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் சில வருடங்களின் பின்னர் வரப்போகின்ற உள்ளுராட்சி மன்றம் என சகலத்திலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.இந்தத் தேர்தலானது 5 வருடத்திற்கான தேர்தலாக நாங்கள் நினைத்து விடாமல் 25-30 வருட காலங்கள் இந்த ஆட்சி அதிகாரம் நிலைத்து நிற்கும் என்பதை மனதில் வைத்து என்னுடைய வாக்குகளை நாங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் செலுத்தவேண்டும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
கடந்த ஒக்டோபர் மாதம் இந்த நாட்டில் கள்ளத்தனமாக ஆட்சியை கைப்பற்ற மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்பட்டு அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதல்கள் போன்றவற்றை நடாத்தி இந்த நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திய  மஹிந்த குடும்பத்தின் ஆட்சி வர வேண்டுமா என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையான இனப்பிரச்சினை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு தரக்கூடியவரை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைக்க வேண்டும். எதிர்வருகின்ற 16 ஆம் திகதி சஜித் பிரேமதாஸ அவர்களே எங்கள் ஜனாதிபதி. அதன் மூலம் நாங்கள் எங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் உதவிகளையும் , தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.
 

Related posts