இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு

2019 ஏப்ரல் 26,27,28 களில் நடைபெற இருந்த நமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு, ஏப்ரல் 21ல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின ஐ.எஸ் குண்டுவெடிப்புக் காரணமாக திட்டமிட்டபடி நடாத்தப்பட முடியவில்லை. இதனால் எதிர்வரும் 2019 ஆனி 29 மற்றும் 30ம் திகதிகளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நமது மாநாடு நடைபெறும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாநாடு தொடர்பிலான தெளிவுபடுத்தல்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019.06.29ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 09.30 மணி தொடக்கம் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெறும். புதிதாகத் தெரிவாகும் தமிழரசுக் கட்சித் தலைவர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். அமைதியான பிரார்த்தனையோடு தொடங்கும் இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட தலைவர் தொடர்பான அறிவிப்பு, பொதுச் செயலாளரின் அறிக்கை, அறிக்கை தொடர்பான கருத்துக்கள் என்பவற்றோடு, புதிய மத்திய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இறுதி நிகழ்வுகளாக மாநாட்டுப் பிரேரணைகளும், தீர்மானங்களும் உருவாக்கப்பட்டு, ஏனைய முன்மொழிவுகள் கருத்திற்கொள்ளப்பட்டு நன்றியுரையுடன் அக்கூட்டம் நிறைவுறும்.
அதே நாள் 2019.06.29 சனிக்கிழமை பிற்பகல் 03.30 மணி தொடக்கம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடு மேற்குறிப்பிட்ட நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறும். மாதர் முன்னணித் தலைவி திருமதி.மதினி நெல்சன் அவர்கள் இதற்குத் தலைமை தாங்குகின்றார். மாதர் முன்னணி மாநாடு நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 05.00 மணிக்கு இதே மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாடு நடைபெறும். இதற்கு வாலிபர் முன்னணியின் தலைவர் திரு.கிருஸ்ணபிள்ளை சேயோன் தலைமை தாங்குகின்றார்.
மறு நாள் 2019.06.30ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று முற்பகல் 09.30 மணிக்கு கட்சியின் பேராளர் மாநாடு ஆரம்பிக்கின்றது. முதல் நிகழ்வாக செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள நமது கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிப்பதோடு இம்மங்கல நாள் மலர்கின்றது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் தொடங்குகின்றன. பேராளர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்கப்படுகின்றார்கள். கட்சிக்கொடி ஏற்றப்படுகின்றது. கட்சிக்கீதம் இசைக்கப்படுகின்றது. மங்கல விளக்கு சுடர்களால் நிறைவிக்கப்படுகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகின்றது. வரவேற்புக் குழுத் தலைவர் வரவேற்புரை வழங்குகின்றார். ஆசியுரைகள் இடம்பெறுகின்றன. தலைவர் அவர்கள் தலைமைப் பேருரையைப் பொலிகின்றார். அதிதிகள் வாழ்த்துரைக்கின்றார்கள். கட்சிப் பொதுச் செயலாளரால் மாநாட்டுத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. நிறைவாக நன்றியுரையோடு நமது 16வது தேசிய மாநாடு நிறைவுற இருக்கின்றது.
பற்றுள்ள தொண்டர்களே, பாசமுள்ள ஆதரவாளர்களே, காலம் நம்மைக் கட்டிப்போட்டிருக்கின்றது. சித்திரையிலே சிறப்பான ஒரு விழாவாக நம் மாநாடு 03 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டது. தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் குமுறி வெடித்த குண்டுகள் நம்மையெல்லாம் அதிர்ச்சியிலும், சோகத்திலும் வீழ்த்திவிட்டன. கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்காக நாம் துக்கித்து நின்றோம். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்தோம். எமது மிகப் பெரிய பிரயத்தனத்தால் இல்லாது போன அவசரகால சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துவிட்டது. இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பயணங்களின் இடையிலே மீண்டும் சோதனைச் சாவடிகள் முளைத்துவிட்டன. அச்சம் பீதியற்று அலுவல்கள் நடாத்தப்படுவதற்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன.
இந்தச் சூழ்நிலையிலே தான் எமது 16வது தேசிய மாநாட்டை நடத்த வேண்டியிருக்கின்றது. பெருமளவான ஏற்பாட்டைச் செய்ய முடியவில்லை. ஒரு எழுச்சி விழாவாக எம்முடைய மக்கள் திரட்சியைக் காட்ட முடியவில்லை. எச்சரிக்கையோடும், அவதானத்தோடும் மாநாட்டை நடாத்த வேண்டியது யதார்த்தமாகிவிட்டது. இருப்பினும் உணர்வும், உற்சாகமும் குறைந்திடாத வகையிலே மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் உங்கள் பங்களிப்புகள் அமையட்டும். நெருக்கடிகளுக்குள்ளால் வாழப் பழக்கப்பட்டவர்கள் நாம். இருப்பினும், இளைஞர்களுக்கு நல்லதோர் புத்தெழுச்சியோடு கூடிய எழுச்சி மாநாட்டை எம்மால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் பழைய சூழ்நிலைக்குப் பழக்கப்படாதவர்கள் எனினும், அவர்களும் காலத்தைப் புரிந்து கொள்வார்கள். கண்ணியணமாக நடந்து கொள்வார்கள். மாநாடு சிறப்புற நடந்தேற தங்கள் கண்ணியமான பங்களிப்பை வழங்குவார்கள் என்பதிலே எமக்குத் திடமான நம்பிக்கையுண்டு.
இந்த எண்ணங்களோடு இதய பக்குவத்தோடு எமது மாநாட்டைச் சிறப்புற நடத்தி முடிப்போம். கடமையுணர்வோடு வாருங்கள். கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். கண்ணியத்தை வெளிப்படுத்துங்கள். வாழ்க தமிழரசு, வாழ்க செல்வா நாமம் என்று தெரிவித்தார்.

Related posts