அதிகார வெறிபிடித்த வர்க்கத்திடம் இருந்து கிழக்கினை மீட்பதற்கு தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று(19)காலை 11.00மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,உண்மையில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மிகவும் தெளிவாக இருந்து கிழக்கு தமிழ்மக்களையும்,கிழக்கு மாகாணத்தின் நில,நிருவாகத்தை மீட்க வேண்டும் எனும் கோஷத்தில் செயற்பட்டு கோத்தபாய ராஜபக்ஷவையை ஜனாதிபதியாக உருவாக்கி காட்டியுள்ளோம்.
நல்லாட்சியின் மீது கொண்ட வெறுப்புக் காரணமாக கோத்தபாயவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியுள்ள மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பதவி விலகி உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும்.
மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருந்தால் வழிவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும்.எமது கட்சிக்கு ஓரளவு வாக்கு சரிவு உள்ளது. அதனை எதிர்காலத்தில் சரிசெய்து தொடர்ந்து பயணிக்க எமது கட்சி தயாராகியுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் எமது கட்சி வன்முறையில் ஈடுபடப்போவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால், இந்த தேர்தல் மூலம் யார் வன்முறையாளர்கள், யார் ஜனநாயகவாதிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.கிழக்கில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. முஸ்லிம் மக்களே அதிகளவில் சஜித்திற்கு வாக்களித்திருந்தனர்.இதனால் முஸ்லிம் சமூகம் தென்னிலங்கை சிங்கள மக்களுடன் வெறுப்பாக இருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் காட்டியிருக்கின்றார்கள்.ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ முஸ்லிம்கள் மீது நம்பிக்கையுடன் உள்ளார்.
இனிமேலும் தமிழ்மக்களை மடையர்களாக மாற்றும் அரசியல் தலைமைகளை மக்கள் வாக்குரிமைகளால் நிராகரிக்க வேண்டும்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் படுகுழிக்குள் வீழவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.கடந்த நல்லாட்சி அரசாங்கம் நான்கரை வருடங்களாக நாட்டு மக்களை ஏமாற்றியது.இதனை யதார்த்தமாக அறிந்து கொண்ட சகோதர சிங்கள மக்கள் முதுகெலும்புள்ள ஒரு ஜனாதிபதியை நாட்டுக்கு தெரிவு செய்துள்ளார்கள்.இனிமேலும் தமிழ்தேசிய அரசியல் தலைமைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் செயற்படுவதற்கு முன்வாருங்கள்.
வடகிழக்கில் சஜித் வெற்றி பெற்றாலும் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியகட்சி,ஜே.வீ.பி பாரியதொரு படுதோல்வியை சந்தித்துள்ளது.ஐக்கிய தேசிய கட்சியினரின் தலைமைத்துவத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.இனிவரும் காலங்களில் சிங்கள மக்களுடன் வடகிழக்கு தமிழ்மக்கள் இணைந்து வாழவேண்டும். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்தேசிய தலைமைகள் தமிழ்மக்களை வைத்துதான் அரசியல் செய்து தத்தமது இருப்பைத் தக்கவைத்து இருக்கின்றார்களே தவிர தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கவில்லை எனத்தெரிவித்தார்.