கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சாய்ந்தமருது, மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள்.கல்முனை மாநகர சபை திண்மக்கழிவகற்றலில் உள்ள அசமந்தம் காரணமாக சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு நேரங்களில் குறித்த தோணாவில் தமது அன்றாட குப்பைகளை வீசுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் , கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பிரதேச சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பல நோய்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பிரதேச வடிகான்கள் சகலதும் இத்தோனாவில் முடிவடைவதுடன் வீதியால் வரும் மழைநீரும் அத்தோனாவில் வந்து சேர்கிறது. மழை காலம் ஆரம்பித்துள்ளதால் குப்பைகள் நிரம்பி நீர் ஓட்டம் குறைந்துள்ளதால் அப்பிரதேசத்தில் பாரிய துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
இந்த தோணாவிற்கான நிரந்தர தீர்வுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தும் முறையான வேலைத்திட்டங்கள் இல்லாமையால் பல தசாப்தங்களாக மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை அனுபவித்துவருவதாகவும் இது தொடர்பில் எல்லோரும் பாராமுகமாக இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு அண்மையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை, சுகாதார மத்திய நிலையம், பிரபல உணவகங்கள், மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளதால் கல்முனை மாநகர சபை, சுகாதார நிறுவனங்கள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துக்கின்றனர்.