தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் திட்டமானது வடக்கு கிழக்கு தமிழர் பாராம்பரிய பண்பாட்டு கலாசாரங்களை அழிப்பதற்கான முயற்சிகளை தோற்றுவிக்கும் என, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சி எடுப்பது தொடர்பாக அவரிடம் கேட்டபோது,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே “ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் தோற்றுவிக்க வேண்டும்”. இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதன் ஊடாக பொதுபலசேனா புத்தபிக்கு கூறுவதை போன்று தனிச்சிங்கள அரசாக மாற்றும் முன்ஏற்பாடாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக பல நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பின் மேற்பார்வையில் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் வாழ்விடங்களில் நினைத்ததை செய்யக்கூடிய ஒருநிலை இதனால் ஏற்படக்கூடும்.
உண்மையில் தொல்பொருள் திணைக்களம் கலாசார அமைச்சின்கீழ் இருப்பதே பொருத்தமானதாகும். தற்போது புதிய ஜனாதிபதி கோட்டபாய பதவி ஏற்றபின் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் பலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களமும் முழுமையாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் கேள்விக்குறியாகும்.
எதிர்வரும் காலத்தில் பொதுத்தேர்தல் ஒன்றை சந்திக்கும் தமிழ்மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் இவ்வாறான செயல்பாடுகளை தடுக்ககூடியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.