சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கம் நடாத்திய பரிசளிப்பு விழா 7 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
கிரான்குளம் சீமூன் கார்டன் மண்டபத்தில் கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சி.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரும் சிறப்பு அதிதிகளாக சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் தொழிலதிபர் சமூகசேவகர் க.துரைநாயகம் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் க.ஹரிகரராஜ்,மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர்.ஜே.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிரான்குளம் பகுதியில் பாடசாலைகளில் சாதனைகளை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக கிரான்குளத்தில் உள்ள பாடசாலைகளிலும் கிரான்குளத்தில் இருந்து வெளிப்பாடசாலைகளிலும் கல்விகற்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை,சாதாரண தரப்பரீட்சை,உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோன்று கிரான்குளத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களும் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.