ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனம் என்பது ஒரு கட்சிசார்ந்த நியமனம் அல்ல,இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு எங்களுக்கு வழங்கப்பட்ட நியமனம் ஆகும்.அதனை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் தேசிய பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் தமிழ் பிரிவுக்கான இணைப்பாளர் என்.கமல்ராஜ் மற்றும் பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கத்தினால் பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் பதவி உருவாக்கப்பட்டு,அமைச்சரவையில் அனுமதிபெறப்பட்டு,வர்த்தமானியில் பிரசுரித்து,அதற்கு அமைவாக விண்ணப்பம் கோரப்பட்டு அதனை தொடர்ந்து இரண்டு தடவைகள் நேர்முக தேர்வுகள் நடந்து,2019-09-16ஆம் திகதியிடப்பட்டு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.அந்த நியமனத்தினை தேர்தலை காரணம் காட்டி நிறுத்திவைத்திருந்தார்கள்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த தடையினை நீக்கி நியமனத்தினை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.ஆனால் அரசாங்கம் அந்த நியமனத்தினை வழங்கவில்லையெனவும் இங்கு தேசிய பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தின் தமிழ் பிரிவுக்கான இணைப்பாளர் என்.கமல்ராஜ் தெரிவித்தார்.
இதில் எந்தவித கட்சி பேதங்களும் பார்க்காமல் அரசாங்கம் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி நியமனங்களை வழங்க முன்வரவேண்டும் எனவும் இதன்போது வே;ணடுகோள் விடுத்தனர்.
பலர் வேறு வேலைவாய்ப்புகளில் இருந்தபோதும் இந்த நியமனங்கள் கிடைத்தபோது அந்தவேலைவாய்ப்பினை விடுத்து வந்த நிலையில் இன்று எந்த தொழில்வாய்ப்புகளும் இல்லாமல் நிர்க்கதியாக நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.