கொரோனா வைரஸ் பரவுவதனைத் தடுக்க அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தால் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முதியோர் எதிர்நோக்கும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதியோர் சங்கங்களின் பராமரிப்பில் செயற்படும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு இந்த இலவச உணவுப் பொதிகளை வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமைய தேசிய முதியோர் செயலகத்தின் மட்டக்களப்பு கிளையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய முதியோர் செயலகத்தின் முதியோர் சமுக பாதுகாப்பு நிதியில் தலா ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம், காத்தான்குடி, கல்லடி, தாண்டவன்வெளி ஆகிய பகுதிகளில் செயற்படும் முதியோர் இல்லங்களுக்கு இந்த உணவுப் பொதிகள் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையிலான நிவாரணக் குழுவினர் ஸ்தலங்களுக்குச் சென்று வழங்கி வைத்தனர். இதன்போது சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் விஸ்வ கோகிலனும் பிரசன்னமாகியிருந்தார்.