கொடூரமான கொரொணாவினால் நமது ஈழத்துப் புலம்பெயர் உறவுகள் நாற்பத்தொரு பேரை இழந்து நிற்பதென்பது புலத்தில் வாழ் எங்களுக்கெல்லாம் எங்களுடைய துயரத்தையும் மிஞ்சிய ஒரு துயரமாக அமைகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அத்துடன், மலர்ந்திருக்கும் புத்தாண்டு எமக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லையென்றாலும், சம்பிரதாய பூர்வமான எமது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரொணாவினால் நமது ஈழத்துப் புலம்பெயர் உறவுகள் மரணித்தமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொடூரமான கொரொணா சம்மந்தமான செய்திகள் அச்சநிலையைக் கடந்து விட்டதாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த துயர நெருப்புக்கு மேலும் எண்ணெய் வார்ப்பதாக எமது புலம்பெயர் உறவுகள் தொடர்பான செய்திகள் நம்மைக் கவலையடையச் செய்கின்றன. நேற்றுவரை கடைசியாகக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நமது ஈழத்துப் புலம்பெயர் உறவுகள் நாற்பத்தொரு பேரைக் கொரோணா காவுகொண்டு விட்டதாக அறிகின்றோம்.
நாடு மீண்டும் மீண்டும் எரிந்ததன் காரணமாக உயிர் காக்க என்றும், வேறு காரணங்களுக்காகவும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது உறவுகள். கடல் கடந்த பின்பு ஈழத்தையும், ஈழத்தமிழ் மக்களையும் பற்றிய உணர்வுகள் இன்னும் பல மடங்கு திண்மை அடைந்தன அவர்ளுக்கு. ஈழத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டிய பல்வேறு விடயங்களைப் புலம்பெயர்ந்து நின்று உரிய இடங்களில், வெவ்வேறு வடிவங்களில் உலகத்துக்கும், பொறுப்புடைய உலக நிறுவனங்களுக்கும் உறைக்கச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
இந்த நேரத்திலே ஒரு மருத்துவர் உட்பட நாற்பத்தொரு பேரை இழந்து நிற்பதென்பது புலத்தில் வாழ் எங்களுக்கெல்லாம் எங்களுடைய துயரத்தையும் மிஞ்சிய ஒரு துயரமாக அமைகின்றது. புலம்பெயர் உறவுகளே உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு மிக மிக முக்கியமானவர்கள். உங்களுடைய பொருளாதாரத்தால் புலத்தின் பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கின்றீர்கள். சுகாதார நெறிவுறுத்தல்களை உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், எங்களுக்குமாக இறுக்கமாகக் கடைப்பிடியுங்கள்.
அத்துடன் மலர்ந்திருக்கும் புத்தாண்டு எமக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லையென்றாலும், சம்பிரதாய பூர்வமான எமது வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். தனிமையைக் காணுங்கள், நமது வழமையான சம்பிரதாயங்களைக் கடைப்பிடியுங்கள், இயற்கை முறைப்படியான நேயெதிர்ப்பு முறைகளைக் கடைப்பிடியுங்கள். தியானம், பிரணாயாமம், கூடிய வரையிலான சைவ உணவு, புலத்தில் நம் வீடுகளிலெல்லாம் செழித்து நிற்கும் முருங்கையிலை என்பவற்றைக் கூடுமானவரை உணவிலே சேர்த்துக் கொள்ளுங்கள். நலமுறவும், நலம்பெறவும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.