வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அனுபவித்த கொடுரங்களை அறிந்திராத சுமந்திரன்

உலகமே மூக்கில் கைவைத்து வியந்துபார்த்த  வீரமறவர்களான தமிழ்மக்களின் வீரம்செறிந்த உரிமைப்போராட்டத்தை மற்றும் தமிழ்த்தேசியத்தை கொச்சைப்படுத்திப்பேச சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.
 
விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக்கூறும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  தனது கண்டனத்தைத்  தெரிவித்துள்ளார்.
 
அவர்  வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வருமாறு.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை மறுதலிக்க சுமந்திரனுக்கு உரித்தில்லை.என்னிடம் தமிழ்ப்பற்றாளர்கள் பலர் மாறிமாறி இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அழுத்துகிறார்கள்.
 
மாபெரும் சட்டமேதை என்று மார்தட்டிக்கொள்ளும் சுமந்திரன் இதுவரை தான்சார்ந்த தமிழ்மக்களுக்காக சாதித்தது என்ன? தமிழ்மக்களுக்கெதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா றிசாட் பதியுதீன் போன்றவர்களை காப்பாற்ற முயற்சித்தார். இன்று ஜனாசா பற்றி கட்டணமின்றி பேசப்போகிறாராம்.
 
இந்தநாட்டில் துன்பங்களையும் வலிகளையும் சதா சுமந்து வாழ்கின்ற தமிழ்மக்களுக்காக நீதிமன்றம் ஏறியிருக்கிறாரா?  சிறையில் விசாரணையின்றி வருடக்கணக்கில் வாடும் தமிழ்இளைஞர்களுக்காக வாதாடியுள்ளாரா?
 
தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ஆயுத போராட்டம் அல்ல அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பெளத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற் கொண்ட ஆயுத போராட்டம். இதை மறுதலிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உரித்து இல்லை.
 
தமிழ்மக்களின் காணிகளை விடுவிக்க சட்டத்தை பயன்படுத்தினாரா? கல்முனையின் எழுச்சிமிகு உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்காக  அந்த மக்களால் செருப்பெறி வாங்கிச்சென்றதை மறக்கவில்லையா? சரி இங்கு வந்தபோது இங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களை சந்திக்கநினைத்தாரா?
 
பொத்துவில் கனகர் கராம மக்களின் காணிப்போராட்டம் வருடத்திற்குமேலாக சென்றதே. அதற்காக இவர் ஒரு வார்த்தை பேசினாரா?
 
பெளத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையை கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதில் இருந்து அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு  வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு தெற்கில் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி கிடைத்த அதிஸ்டத்தால் வாழ்ந்தவருக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?
 
கொழும்புவாழ் சிங்கள்மக்களின் வாக்குகளுக்காக ஜால்ரா அடிக்கவேண்டுமானால் அங்கு நிற்கட்டும். தமிழ்த்தேசியத்தை கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும்.
 
வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள்  ஆயுதம் ஏந்தி போராடினர்கள். அந்த வீரம்செறிந்த போராட்டத்ததை உலகமே பார்த்து வியந்தது.இலங்னை அரசு திணறியது. அருகிலுள்ள நாடுகள் பயந்து நடுங்கின.
 
இன்றைய கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு ஏhபவது நிவாரணத்தைச் வழங்காத சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடிய போராளிகள்  போராடி தமது உயிர்களை காவியமாக்கிய மாவீரர்களையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நானும் எம் மக்களும் கருதுகின்றோம்.
 
உலக நாடுகள் பல தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்திலே யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு  கொழும்பில் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தி ரணிலிடம் பெற்றது போன்று தற்போது மகிந்த அரசிடம் மீண்டும் அதிஷ்டங்களை பெற முயற்சிக்கிறார்.
 
‘தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்’ என்று கூறிய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கருத்தாகவோ கருதக்கூடாது என்றும் அவருடைய கருத்து தொடர்பாக கட்சி மிகவிரைவில் உரிய முடிவு எடுக்கும் என நம்புகின்றோம்.
 
எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் பேச்சாளர் பதவியிலிருந்தும் இறக்கவேண்டும். என்றார்
 
கிழக்கிலிருந்து சுமந்திரனுக்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 
 

Related posts