மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரின் முயற்சியினால் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபைக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் கழிவுகளைக் கொட்டுகின்றவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வீதியின் இருமருங்கிலும் குளங்கள் காணப்படுவதுடன் இவ் வீதியானது அம்பாரை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்டதாகவும் துறைநீலாவணைக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்டதாகவும் இருப்பதனால் இங்கு கொட்டப்படும் கழிவுகளைப் பற்றி யாரும் கணக்கெடுக்காத நிலையே காணப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்சினையினை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து அவர் ஸ்தலத்திற்கு வருகைதந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இவ் வீதியில் குப்பைகளை கொட்டுகின்ற நபர்களை விசேட அதிரடிப்படை,பொலிஸாரின் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கைதுசெய்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இவ்வீதியில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக பலரிடத்திலும் முறையிட்டும் உதாசினப்போக்கினைக் கடைப்பிடித்து வந்துள்ள நிலையில் அவ்விடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு முதல்வர் தி.சரவணபவன் அவர்களுக்கு துறைநீலாவணை மக்கள் நன்றிதெரிவித்ததுடன் முதல்வருடன் ஸ்தலத்திற்கு களுவாஞ்சிக்குடி பிரதேச வைத்திய அதிகாரி கிருஸ்ணகுமார் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து,மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கடசியின் இளைஞர் அணித்தலைவர் க.சசிகரன்பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்