பசுமை இல்லம் எனும் மரம் வளர்க்கும் செயற்பாட்டினை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் நோக்கோடு செயற்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் மற்றுமொரு கட்டப் பணியானது மன்னார் மடு பிரதேசத்தில் செயற்திட்டத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பசுமை இல்லம் செயற்திட்டத்தின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் என்.நகுலேஸ், மடு பிரதேச செயலாளர் வினோதினி குணசிங்கம் அவர்கள், உதவிப் பிரதேச செயலாளர் அன்டனி, பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.திலிபன், பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் பசுமை இல்லம் செயற்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் கே.வினோத் உட்பட நிருவாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மரம் வளர்க்கும் செயற்பாட்டினை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்குடன் கனடா வாழ் உறவுகளின் மூலம் மேற்படி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு தற்போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மடு பிரதேசத்தில் சின்னப் பண்டிவிரிச்சான் மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் கிராமங்களில் சுமார் 20 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதைக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் என்பன வழங்கி இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.