3000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி எந்த பந்தமும் பெற்றுக்கொள்ளாமல் ,ஒருத்தரிடமும் ஒரு ரூபாவும் வாங்காமல் தமிழ்மக்களுக்கு சேவை செய்து தமிழ்மக்களின் இன்னல்களை துடைத்துள்ளேன்

3000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி எந்த பந்தமும் பெற்றுக்கொள்ளாமல் ,ஒருத்தரிடமும் ஒரு ரூபாவும் வாங்காமல் தமிழ்மக்களுக்கு சேவை செய்து தமிழ்மக்களின் இன்னல்களை துடைத்துள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் ஞானமுத்து கருஸ்ணப்பிள்ளை(வெள்ளிமலை) தெரிவித்தார்.

பழுகாமத்தில் செவ்வாய்கிழமை(30)மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 304 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.நான் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் தமிழ்மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்.தமிழ்மக்களுக்கு கடந்தகாலங்களில் சேவை செய்வதற்காக புறப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களுக்கு சேவையை செய்யாமல் கதிரையை சூடாக்கினார்கள்.ஆனால் கடந்த காலங்களில் வாக்குகளை தமிழ்த்தலைமைக்கு வழங்கிய தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

வாக்குப்பலம் தான் தமிழர்களின் அடையாளம் என்று வாய் கிழிய கத்தி வாக்குச் சேகரித்தவர்கள்,வாக்கு சேகரித்து பாராளுமன்றம் சென்ற பாராளுமான்ற உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவி,மக்கள் எல்லாம் அரசாங்கத்திடம் கையை நீட்டி அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டார்களே தவிர தமிழ்மக்கள் ஏமாற்றத்துடன் ஏழையாகவும்,வறுமையாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள்.ஆனால் நான் நமது மண்ணையும்,மதத்தையும்,இனத்தையும்,இருப்பையும்,பாதுகாப்பையும் பாதுகாப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யாத அபிவிருத்தி,தொழில் வாய்ப்பு,கல்வி,கலாச்சாரம்,பண்பாடு, ஒழுக்க விழுமியங்கள்,என்பனவற்றுடன் இம்மண்ணையும்,தமிழ்மக்களின் இருப்பையும் பாதுகாத்து சாதனை படைக்கனும் என்பதில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி விறுவிறுப்புடன் செயற்படுகின்றது.அதற்காக நான்  பக்கபலத்துடன் செயற்பட்டு தமிழ்மக்களையும்,அவர்களின் இருப்பையும் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திலே குரல்கொடுத்து எம்மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு நான் உழைப்பேன்.

“நாங்கள் எங்கும் செல்வோம்;எதிலும் வெல்வோம்” எனும் நற்சிந்தனையுடன் கிழக்கு மண்ணை பாதுகாப்பதற்காக என்னுடைய தியாகம் தமிழ்மக்களுக்காக தொடரப்படும்.நான் 1965 ஆம் ஆண்டு முதல் தமிழ்தேசியத்துடனும்,தமிழரசுக்கட்சிக்காகவும்,தமிழ் இளைஞர் பேரவைக்காகவும்,தமிழர் விடுதலைக்கூட்டணிக்காகவும் நான் அயராது உழைத்தவன்.தமிழ்தேசிய உணர்வுடன் செயற்பட்ட எனக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு அனுமதிக்கவில்லை.உண்மையில் தமிழ்மக்களுக்காக யுத்தகாலத்தில் குரல்கொடுக்க தவறியவர்கள்,போராட்டத்திற்கு பங்களிப்பு செய்யாதவர்கள் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பில் உணர்வுமிக்கவர்களாக தமிழ்மக்களிடம் புலித்தோல் போற்றிய பசுக்களாக வலம் வருகின்றார்கள்.இது தமிழ்மக்களை ஏமாற்றும் நரித்தந்திரமாகும்.இதனை தமிழ்மக்கள் விழிப்புடன் செயற்படனும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 வீதமானவர்கள் பாமரமக்களாகும்.ஏழைமக்களை ஏமாற்றும் அரசியலை நான் ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.தமிழ்மக்களை நாட்டில் உள்ள அரசாங்கத்திடம் அடமானமாக வைத்து ,அதிலே எதிர்ப்பு அரசியலை செய்து பிழைப்பு நடாத்தும் தமிழ்தலைமைகளுக்கு இம்முறை வடகிழக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்தலைமைகளின் அரசியலை இம்முறை தமிழ்மக்கள் முடிச்சுப்போடுவார்கள்.

உருத்திரப்போடியார் வந்தால் உள்ளே வா,உத்தமன் வந்தால் ஐயா விசி,பத்மநாதன் ஜீயே வந்தால் மேல்மாடியில் பாட்டி,வவுணதீவு கந்தசாமி வந்தால் ஐயா உறக்கம்,வாகரை வடிவேல் வந்தால் ஐயா கொழும்புக்கு போயிட்டார்,வெல்லாவெளி நேசமணி வந்தால் ஐயா வாத் ரூமுக்குள் என்று தமிழ்மக்களை ஏமாற்றியவர்கள் எல்லாம் அம்மக்களை  பகடைக்காயர்களாக வைத்து கோடிக்கணக்கில் உழைத்து, சேர்த்து மூன்று தலைமுறைக்கு சொத்து சேகரித்துள்ளார்கள்.ஆனால் நான் பாராளுமன்றம் சென்று ஏழைமக்களை வாழவைத்துள்ளேன்.

நான் பாராளுமன்ற பிரநிதியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்று அபிவிருத்தி,தொழில் வாய்ப்புக்களையும் செய்திருக்கின்றேன்.11பாடசாலைகளை மட்டக்களப்பிலே கட்டிக் கொடுத்திருக்கின்றேன்.கலாச்சார மண்டபம்,விளையாட்டு பார்வையாளர் மண்டபம்,விளையாட்டு மைதான புனரமைப்பு,பாலர் பாடசாலை புனரமைப்பு,மயான வேலைகள்,பாதை புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திகளை செய்து தமிழ்மக்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன்.3000 மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு,3000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி எந்த பந்தமும் பெற்றுக்கொள்ளாமல் ஒருத்தரிடமும் ஒரு ரூபாவும் வாங்காமல் தமிழ்மக்களின் இன்னல்களை துடைத்துள்ளேன்.எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் படகுச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் படகுச்சின்னத்தை எண்ணத்தில் ஏற்றி, அதற்கு புள்ளடியிட்டும்,எனது விருப்பு இலக்கமான 5க்கும் புள்ளடியிட்டும் பாராளுமன்றம் அனுப்பி பாராளுமன்றத்தில் கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கான குரல் ஒலித்து கிழக்கை மீட்பதற்கு தயாராகுங்கள் எனத்தெரிவித்தார்.

Related posts