கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் இன்று(8) புதன்கிழமை முதல் இம்முறை க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு முன்னோடிக கணிப்பீட்டுப் பரீட்சையை நடாத்தவுள்ளது.
கொரேனா விடுமுறைக்குப்பின்னர் சுமார் நான்கு மாதகாலத்திற்குப்பிற்பாடு நேற்றுமுன்தினம்(6) மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர்களை கற்றல் மனநிலைக்கு தயார்படுத்துமுகமாக இந்நடவடிக்கையை கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மேற்கொண்டுள்ளார்.
இது ஒரு வழமையான இறுக்கமான பரீட்சை அல்ல. விடுமுறையில் நின்ற மாணவர்களை மீண்டும் பரீட்சைக்கும் கற்றலுக்கும் தயார் படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முன்னோடி கணிப்பீடு என மாகாணக்கல்வித்திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி 2020க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்க்கான பரீட்சை இன்று 8ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை தொடர்;ச்சியாக சகலபிரிவுகளுக்கும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று அடுத்தவருடம் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்க்கான முன்னோடி கணிப்பீட்டுப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகும்.
இவர்களுக்கான 3ஆம் கட்ட பாடசாலை செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பித்து மூன்றாம் நாளான 22ஆம் திகதி இப்பரீட்சை ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
இதற்கான நேரசூசிகள் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு ம் அனுப்பப்பட்டு அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2020அணியினருக்கான வினாத்தாள்களை அந்தந்த ஆசிரியர் மதிப்பீடு செய்து புள்ளிகளை பகுப்பாய்வுசெய்ததும் அதனை 30.07.2020க்கு முன் வலயத்திற்க அனுப்பிவைக்கவேண்டும் எனக்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் 2021 அணியினருக்கான புள்ளிகளை 20.08.2020க்கு முன் அனுப்பப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் புள்ளியிடல் பிரதியுடன் மாணவர்களின் கற்றலுக்காக அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.