மட்டக்களப்பு நகரின் வடக்கே பதினேழு கிலோமீற்றர் தூரத்தில் கிழக்கே வங்கக்கடலையிம்,மேற்கே காடுகயையும்,மலைகளையும்,ஆறுகளை யும் ஒருங்கே அமைந்த விற்பனைமடுவையும் எல்லையாகக் கொண்ட கிராமம் வந்தாறுமூலையாகும். இங்கு ஆரம்பகால குடியிருப்புக்கள் மேற்கே உருவானது. வந்தாறுமூலையின் வரலாற்றை கி.பி 1622 ஆண்டு காலப்பகுதியில் வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தில் பூசகராக இருந்த மயில்வாகனம் சாஸ்த்திரியார்; ஆரம்பகால வரலாற்றையும் போர்த்துக்கேயரின் வருகையையும் ஏடுகளில் எழுதி வைத்துள்ளார். மயில்வாகனம் சாஸ்த்திரியாரின் இறப்பின் பின் இவரின்; சந்தியினரினாலும் இந்திய அமைதி காக்கும் படைகள் வந்தாறுமூலையில் நிலைகொண்டுள்ள காலம் வரை ஏடுகளில் எழுதிவைத்துள்ளார்கள். இந்த ஏடுகளை வாசித்த பின்;னே வந்தாறுமூலையில் ஆய்வுகளை மேற்கொண்டோம்.
மட்டக்களப்பு தேசத்துக்குரிய மிகவும் பழைமையான தொல்பொருள் சின்னங்கள் இருவகைப்டும். இவை பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள். பிராமி கல்வெட்டுக்கள் என்பனவாகும். அவற்றிடையே சில பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் காலத்தால் முற்பட்டவை. சோழமண்டலக் கடற்கரையில் உள்ள காவிரிப்பூம்பட்டிண துறைமுகப்பட்டிணத்தின் வழியாக ஏற்பட்ட வங்கக்கடல் கடல்வழிப்பயணங்கள் மூலமாக தென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்பு தேசத்திற்கு பரவியது. இப்பண்பாடானது வந்தாறுமூலைக்கு வடக்கே உள்ள கல்குடா யானைமுனை கழிமுகத்தினுடாக ஆற்றுவழியாகவும், வந்தாறுமூலைக்கு கிழக்கே உள்ள வங்கக்கடல் வழியாகவும் வந்தாறுமூலைக்கு பரவியது. இதனை ஏடுகள் பின்வருமாறு உறுதி செய்கிறது. நாகநாட்டு அரசன் படநாகன், அரவஞ்சூடியின் புத்திரன்; நாகராஜன் என்பவன் புகார்பட்டணத்தை அடைந்தவன் புகாரின் ஆத்திசூடியான், கவினியின் புத்திரி அயினியை மணந்துகொண்டான். தனது மனைவி அயினியையும் அழைத்துக்கொண்டு புகார்பட்டணத்திலிருந்து இலங்கைத்தீவிற்கு மரக்கலம் ஏறி கடல் பயணத்தினை மேற்கொண்டவன் இலங்கைத்தீவின் கிழக்குகடற்கரையோரமாக உள்ள கழிமுகத்தினுடாக ஆற்றுவழியாக வரும் போது ஆற்றின் இருகரைகளிலும் இருந்த வீரைமரங்கள் ஆற்றைமறித்து அணைபோட்டால் போல் இருந்ததால் ஆற்றுக்கு வீரக்கட்டாறு என நாமம்சாற்றி ஆற்றம் கரையோரமாக இறங்கி நின்ற போது சித்தர் ஒருவர் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். நீராடிக்கொண்டிருந்த சித்தர் இருவரையும் வேரோடியமலைக்கு அழைத்துச்சென்ற போது வேரோடியமலையில் வாழ்ந்து கொண்டிருந்த நாகர்குலத்தோர் வந்திருப்பவன் நாகர்குலத்து அரசன் என்பதை அறிந்து மரியாதை செலுத்தினார்கள். நீண்டகால அடிப்படையில் வாழ்ந்த மக்கள் தங்களின் தலைவனாக நாகராஜனை தெரிவு செய்தவர்கள் குறுநில அரசுக்களாக மாற்றம் அடைந்து அரசாட்சி செய்யத்தொடங்கினர். மயிலைமுடிச் சித்தர் வேரோடியமலைக்கு கிழக்கு திசையில் உள்ள விஸ்ணு ஆலயத்தில் நாகராஜனுக்கு முடிசூட்டி அரசனாக்கினார். நாகராஜனைத் தொடர்த்து முந்தன், குமாரன், வெளியன், சின்னாளன், ஈரழன், இலாவணன், சடவக்கையன், மயிலன், உச்சத்தைவணன் போன்றோர் குறுநில அரசுக்களாக ஆட்சி செய்தனர்.
ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் அரசியலிலும் ஆட்சி முறையிலும் இயற்கை அமைப்பை பின்பற்றி; அரசியல் நிருவாகப் பிரிவுகளையும் இடைக்கால தலைநகரங்களையும், அரசபீடங்கயையும், ஆறுகளையும், வனங்ளையும்; மையமாக கொண்ட குன்றுகளிலும், கடற்கரையோரத்திலும் அமைந்தனர். குறுநில அரசுக்களையும் ஏற்படுத்தி தங்களுக்குரிய அரசியல் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அரசாட்சி செய்த இடங்களில் பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்களும், தமிழ்பிராமி கல்வெட்டுக்களும் கிடைக்கப்பெற்றன. இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சின்னங்களில் வேள் எனும் தமிழ் பிராமி வரிவடிவம் காணப்பட்டன. குறிப்பிட்ட ஒரு மொழிக்கான எழுத்து தோன்றுவதற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு மொழி கல்வெட்டுக்களில் எழுதுவதற்கு முன்னரே அம்மொழி பயன்பாட்டிலிருத்தல் வேண்டும். இலக்கிய வளம்பெறாத மொழிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. இலக்கிய வளம்பெற்ற தமிழ் மொழி ஆதிகாலம் தொட்டு மட்டக்களப்பில் பயன்பாட்டில் இருந்துள்ளன.
மட்டக்களப்பு பிராந்தியத்தில் உள்ள பிரதேச ஆட்சியாளர்களை வேள்நாகன் என்று அழைக்கப்பட்ட முறையினை தமிழ் பிராமி கல்வெட்டு குறிக்கின்றன. வேளீர் என்பது வேள் என்பதன் பன்மை. வேள் என்ற சொல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முதல் ஈழக் கல்வெட்டுக்களில் பயின்று வருகின்றன. மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வேள் எனும் பட்டம் பெற்ற குறுநில அரசுக்கள் ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள் இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சின்னங்களில் வேள் எனும் தமிழ் பிராமி வரிவடிவம் காணப்பட்டமையாகும்.
வேள்நாகன் எனும் கூட்டு மொழிச்சொல் மட்டக்களப்பு மாவட்டத்தின் இதுவரைக் கிடைத்துள்ள ஆவணங்களில் புரதானமானவை. வேள் என்பது அரசநிலை உருவாக்கத்தில் முதலாவது படிநிலைக்குரிய பட்டப் பெயராகும். அதன் இரண்டாவது கட்டத்துகுரியது வேந்தன் எனும் பட்டப் பெயராகும். அதுவே முடிமன்னனுக்குரியது. தமிழ் வழக்கிலே பொருள் மரவில் வேள், வேந்தன் எனும் சொற்களிடையே வேறுபாடு ஆதிகாலம் முதலாக நிலவி வந்துள்ளது. குறுநில மன்னரை வேள் என்றும் முடிக்குரிய மன்னரை முடியுடை வேந்தர் என்றும் தொல்காப்பியம் வேறுபடுத்தி கூறுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை வேள் என்பது கோ, கோன் என்பவற்றுக்கு நிகரானது. இலங்கையில் குறுநில அரசுக்களை அமைத்த நாகர் வேள் என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.
வந்தாறுமூலையில் சங்ககால தமிழகத்தில் காணப்பட்ட வேளீர்குல குறுநில அரசுக்களை ஒத்தவகையில் குறுநில அரசுக்கள் அமைப்பு காணப்பட்டுள்ளன. சங்ககால தமிழகத்தில் வேளீர் மரபினர் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தியமையை இலக்கிய நாணய சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அதியமான் இளந்திரையன், நெடுமான்அஞ்சி மற்றும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் பாரி, காரி, அதிகன், ஆய் ஆகியோர் வேளீர் மரபில் வந்த சிற்றரசுக்கள் ஆவர். வந்தாறுமூலையில் இவ்வம்சத்தின் ஒரு கிளை செல்வாக்கு செலுத்தியமைக்கான சான்றாக வேள் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் கிடைத்தமையாகும். இங்கு காணப்பட்ட கலவோடுகள், கூரையோடுகள் சங்ககால தமிழகத்தில் காணப்பட்ட கலவோடுகள், கூரையோடுகளை ஒத்திருந்தன. சுடுமண்வளையத்தினால் அமைக்கப்பெற்ற உறைகிணறும் காணப்படுகின்றன. சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் புலவர்
“கங்கை வாரியும் காவிரிப்பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்”
எனும் பாடலடி மூலம் ஈழத்து உணவான அரிசி கடல் வழியாக காவிரிப்பூம்பட்டினத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இங்கு காணப்பட்ட மிகை உற்பத்தி உணவு சென்றுள்ளதை இச்செய்யுள் வலியுறுத்துகின்றது. ஐரோப்பியர்கள் வற்றிக்கலோ அதாவது தானியக்களஞ்சியம் எனச் சொல்வதாகவும் எஸ்;.ஓ.கனகரெத்தினம் எடுத்துரைத்துள்ளார். இங்கு காணப்பட்ட மிகை உற்பத்தி உணவு வெருகல், வாகரை, கல்குடா துறைமுகத்தின் ஊடாக மட்டக்களப்பில் இருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு சென்றுள்ளதை இச் செய்யுள் வலியுறுத்துகின்றது. குளநீர் பாசன பயிரச்;செய்கை பொருளாதாரத்தின் ஈட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்ட மிகை உற்பத்தியானது, நகர உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தமிழகத்தின் காவிரி நதிப்படுக்கையில் உருவாகிய நகர அமைப்பு (காவிரிப்பூம்பட்டினம்) இலங்கையில் கந்தரோடை, அனுராதபுரம் போன்றனவும், தென்னிலங்கையில் கதிர்காமம், மட்டக்களப்பு, கதிரவெளி, வந்தாறுமூலையில் வேரோடியமலை, படிவெட்டியமலை, வேரம், போன்றன பெருங்கற்கால பண்பாட்டு பொருளாதாரத்தின் ஈட்டத்தின் பின்னனியயல் உருவாக்கப்பட்ட நகர மயமாக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.
புராதன கால வந்தாறுமூலையின்; குறுநில அரசுக்கள் ஆட்சி புரிந்தமையை வந்தாறுமூலை வரலாற்று ஏடுகளும், பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்களும், தமிழ்பிராமி கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. தமிழ்மொழி பேச்சுமொழியாகவும், கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் வரிவடிவமும் பெற்று வளர்ச்சி நிலையடைந்தும் காணப்பட்டுள்ளது.