நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தினை குறைப்பதற்காக 37 கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டு இருக்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு துறைநீலாவணையில் சனிக்கிழமை மதியம் 01 ஆம் திகதி இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுவுமாக மொத்தம் 38 கட்சிகள் போட்டியிடுகின்றன இதில் தமிழ் மக்களின் உரிமைக்காக தேர்தலில் போட்டியிடும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே ஏனைய 37 கட்சிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இறக்கப்பட்டு இருக்கின்றன இவர்கள் செல்லும் இடம் எல்லாம் தமிழ்க் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற பிரச்சாரம் செய்கின்றனர் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ததோ அதனை பிரச்சாரமோ விளம்பரமோ செய்யவில்லை 2009 ஆண்டில் இருந்து அரசபடைகளால் கையகப்படுத்தப்பட்ட 67 ஆயிரம் ஏக்கர் காணிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுவிக்கப்பட்டது அதே போன்று அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றனர் இவற்றையெல்லாம் நாம் விளம்பரம் செய்யவில்லை
தமிழ் மக்களுக்கு என்ன விடயம் நடக்க வேண்டுமானாலும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமே நடந்தேறுமே தவிர இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகக் கொக்கரிப்பவர்களால் எதுவும் நடக்கப்போவதில்லை.