இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.08.11) முற்பகல் அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அலரி மாளிகையில் அரச மரத்தடியில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் அதனை தொடர்ந்து அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார். வித்யோதய பிரிவேனாதிபதி காலி மேல் இரு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்கர் கலாநிதி பலாங்கொட சோபித நாயக்க தேரர் உள்ளிட்ட தேரர்களினால் வழிபாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மத வழிபாடுகள் இடம்பெற்றன.
பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (எஸ்.எல்.பி.பி) தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்று, இந்நாட்டு வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை நிகழ்த்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார்.
1970ஆம் ஆண்டு இளைய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு முறை ஜனாதிபதியாகவும், மூன்று முறை பிரதமராகவும் சேவையாற்றியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் ஒன்பது பொதுத் தேர்தல்களிலும் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன்முதலில் 1994ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2004இல் முதல் முறையாக பிரதமரானார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியான அவர் 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த 9ஆம் திகதி களனி ரஜமஹா விகாரை வளாகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் ஊடக பிரிவு