இதுவரை பழகிப்போன மாமூல் அரசியலை விடுத்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி அதனூடாக தூய நேர்மையான அரசியலை நடாத்த ஆசைப்படுகிறேன். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 18389 வாக்குகளைப் பெற்றுத்தெரிவான இளம் சட்டத்தரணி மொகமட் முஸர்ரப் முதுநபீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெற்றி பெற்ற பின்னர் பள்ளிவாயலுக்குச் சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் ஒரு எம்.பி போன்று படாடோபமாக வாழமாட்டேன். சமுகத்தோடு இணைந்து மக்களில் ஒருவனாக மக்களோடு இருந்து சேவை செய்யவிரும்புகிறேன். எம்.பிக்குரிய வரப்பிரசாதங்களை வஞ்சிக்கப்பட்ட கிராமங்களுக்காக பயன்படுத்துவேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடி மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள். எனவே நான் அல்லாஹ்வின் மாளிகையில் இருந்து சத்தியமிட்டு வாக்குறுதி வழங்குகிறேன் இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன்.
‘நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன். எனக்கு இருக்கின்ற ‘கோட்’ போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வேன். என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹகாட்டித் தந்துள்ளான்’ – என்றார்.
பொத்துவில் மண்ணுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் ஊடகவியலாளனாக இருந்தபோதே சில வேலைத்திட்டங்களைச்செய்துவந்தே ன்.
அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக இந்த மண்ணை ஏமாற்றிவந்தமையை அறிந்து அந்த அரசியல் அதிகாரத்தை நாம்பெறவேண்டும்.அதனூடாக இந்தமண்ணுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யலாம்.மேலதிகமாக அல்லாஹ் நாடினால் இம்மாவட்ட மக்களுக்கு இனமதபேதம் பாராமல் சேவைசெய்யலாம் என்றெண்ணி இத்துறையில் நம்பிக்கையுடனிறங்கினேன்.
மூவினமும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இப்பூமியை அரசியல்வாதிகளே அவ்வப்போது பிரிக்கமுற்றபட்டார்கள்.இனி அதற்கு சற்றும் இடமளிக்கமாட்டேன்.
கடந்தமுறை த.தே.கூட்டமைப்பு பெற்றதைப்போல் எமது கட்சிக்கு 40-45ஆயிரம் வாக்குகளும் எனக்கு 17-18ஆயிரம் வாக்குகள் வந்தாலே போதும் என நினைத்து தேர்தலில் நின்றேன். மக்கள் நம்பினார்கள். ஆதவளித்தார்கள். கனவு நனவானது.
மக்கள் என்னோடு தொடர்ச்சியாக ஒத்துழைத்தால் பெரும் சமுகமாற்றத்தை ஏற்படுத்தமுடியும். என்றார்.