பேரினவாதிகள் சிறுபான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடாத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்.

இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் (Muslims in Sri Lanka) என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லாதொழிக்கப்பட்டு இலங்கை முஸ்லீம்கள் (Muslims of Sri Lanka) என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வரும் வரை இன செளஜன்யத்தை இனங்களுக்கிடையில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
அவ்வறிக்கையில் மேலும்,
 
நாட்டில் வாழுகின்ற மொத்த முஸ்லிம்களில் கிழக்கில் வாழும் மூன்றிலொரு பங்கினர் எடுக்கின்ற தவறான அரசியல் நடைமுறைகளால் கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோன்று கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களும் சரியான நேரத்தில் பிழையான முடிவுகளை எடுத்து கிழக்கு மக்களை காட்டிக்கொடுக்க முயலவும் கூடாது. பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கம் முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அபிலாசைகள் அனைத்தும் சாதாரண பொது மக்களின் அபிலாசைள் இல்லை என்ற அடிப்படையில் அப்பொது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டும்.
 
பெரும்பான்மை மக்களை பகைத்துக் கொண்டு விமர்சனங்கள் செய்து உணர்ச்சி அரசியல் செய்துகொண்டு வெற்றுக் கோசங்களினூடாக மக்களை உசுப்பேத்தி சிறுபான்மை இனங்கள் வாழ முயற்சிக்காமல், பேரினவாதிகளின் இனவாத செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறே பேரினவாதிகள் சிறுபான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடாத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் பல்லின சமூகம் வாழுகின்ற ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஒரே நாடு, ஒரே தேசம் – இலங்கை மக்கள் என்ற கொள்கைக்கு மூவின மக்களும் தங்களது இன ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

Related posts