மண் வியாபாரத்திற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரங்களை ஒரு குடும்பத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் ஏனையோருக்கும் வழங்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மண் வியாபாரத்திற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரங்களை ஒரு குடும்பத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் ஏனையோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ.விக்ரம மண்டபத்தில் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ. வீரசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆற்று மண் மற்றும் ஏனைய மண் ஏற்றுவதில் பெரியதொரு மாபியா இடம்பெற்றுள்ளது. மண் அகழ்வில் ஈடுபடுவோர் கிராமப்புறங்களில் மண் அகழ்வில் ,   ஈடுபட்டுவிட்டு அந்த இடங்களை அப்படியே இடைநடுவில் விட்டு செல்கின்றனர். அந்த இடம் பள்ளமும் குழியாகவும் காணப்படுகின்றது. ஒரு தனி நபருக்கு அவரின் குடும்பத்தைச் சேரந்த 25 பேரின் பெயர்களில் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் பெருமளவில் பணம் சம்பாதிக்கின்றனர்.இந்த நிலமைமாற்றப்பட்டு தொழில் செய்யக்கூடிய அனைவருக்கும் மண் ஏற்றும் அனுமதி பத்திரங்கள் பகர்ந்தளிக்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.
பொத்துவில் லாஹுகல பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசன பிரச்சினை , ஹெடஓயா ஊடாக பாலம் புதிய அமைத்தல் , கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுத்தல் , அம்பாறை குளத்திற்கு அருகிலுள்ள தொல்பொருள் பிரதேசத்தை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து விடுவித்தல் , ஆலையடிவேம்பு மாவட்ட வைத்தியசாலை மற்றும் பொத்துவில் கோமாரி வைத்தியசாலைகளில் நிலவும் குடிநீர்ப்பிரச்சனையை தீர்த்து வைத்தல் , தீகவாபி கிராமிய வைத்தியசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல் , போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுணரும் அம்பாறை மாவட்ட அபிவருத்திக்குழு இணைத்தலைவருமான அனுராதா யஹம்பத் , மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  திணைக்களத்தலைவர்கள் , பிரதேச செயலாளர்கள் , மாநகர , நகர மற்றும் பிரதேசசபைத் தலைவர்களும் கலந்து கொண்டனர், 
 
 

Related posts