சீயோன் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு மீண்டுமொரு தடவை இப்படியானதொரு பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த நாடு உள்ளாக்கப்படக் கூடாதென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு புதூர் பகுதியில் வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 17ம் திகதி நடைெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,
அத்தோடு நாட்டிலே பாதுகாப்பு முக்கியம், நாட்டிலே மக்கள் சந்தோசமாகவும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும், நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்ப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.
அதே போன்றுதான் நாட்டினுடைய மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும் அரசாங்கம் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றது, உங்களுக்கு தெரியும் கடந்த வருடம் ஏப்பிரல் 21 முழு இலங்கையையும் உலுக்கிய பயங்கரவாத குண்டுதாக்குதல், இந்த பயங்கரவாத குண்டுத்தாக்குதல் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது.
சஹரான் குழுவினுடைய இந்த பயங்கரவாத குண்டு தாக்குதலால் நாட்டினுடைய சுற்றுலாத்துறையில் ஒரு பாரிய பின்னடைவு ஏற்பட்டது மட்டுமல்ல, கடந்த அரசாங்க காலத்திலேயே தான் இது நடைபெற்றது, இதனால் பாதுகாப்பிலே மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது.
அந்த அடிப்படையில் இப்போதைய அரசாங்கம் குறித்த குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதிலும் அது தொடர்பான விடையங்களை ஆராய்வதிலும் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் கூட செய்தி இணையத்தளம் மூலமாக நான் அறிந்துகொண்டேன் சஹாரானின் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய கார் கூட பொலிசாரினால் காத்தான்குடி பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
அந்த ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறன்று தேவாலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தைகள் கூட இந்த பயங்கரவாத தாக்குதலிலே எந்த சம்பந்தமும் இல்லாத குழந்தைகள் கூட வெடித்து சிதறினார்கள் ஆகவே அந்த ஆத்துமாக்கள் சாந்தியடைய வேண்டும், நாட்டிலே இன்னுமொரு சம்பவம் இவ்வாறு ஏற்படாது இருக்க வேண்டுமானால் ஆகவே இதிலே சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் எந்த தரப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை சட்டத்தின் மூலமாக வழங்கப்படவேண்டும். இந்த விசாரணைகளை தற்போது அரசாங்கம் சரியான முறையிலே பல கோணங்களிலும் நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றது என்றார்.