கோவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அரச திணைக்களங்களில் கடமைபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து வீட்டிலிருந்து வேலை செய்வதற்கேற்றவகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திணைக்களத் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளரினால் சுற்று நிருபம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பில் இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சகல திணைக்களங்களுக்கும் இச்சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக இது அமுலுக்கு வருகின்றது என நவம்பர் முதலாந்திகதி கொரோனா தடுப்பு செயலனியின் விசேட கூட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பில் பதிலளித்திருந்தார்.
இருப்பினும் மட்டக்களப்பில் சில திணைக்களங்களில் இந்நடைமுறை பின்னபற்றப்படாமல் சகல உத்தியோகத்தர்களும் முழுநேரக் கடமைபுரியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை ஊடகங்களுக்கு சுட்டிக்கட்டப்பட்டுள்ளதுடன் உத்தியோகத்தர்களினாலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தூர இடங்களில் இருந்தும், பொதுப் போக்கு வரத்துகள் மூலம் கடமைக்கு வருபவர்களும், கற்பினிப் பெண்களும் இவ்வாறான சூழ்நிலையில் முழுநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையானது கொரோனா பரவலினைத் தடுக்கும் செயற்பாடாகுமாஎன கேள்வி எழுகின்றது.
எனவே திணைக்களத் தலைவர்கள் இதுதொடர்பில் கவனஞ்செலுத்தி ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிருபத்திற்கமைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.