வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதத்தை 7 சதவீதமாகக் குறைக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் மத்திய வங்கிக்கு அறிவறுத்தியுள்ளனர் என்றும் அது சமபந்தப்பட்ட சுற்றறிக்கையை மத்திய வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கும் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் “பொய்யைத் தோற்கடிப்போம்” என்று தீப்பந்தங்களை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், நாங்கள் அதை அவர்களின் சொந்தத் தோல்விக்கு எதிரான போராட்டமாகவும் பார்த்தோம் என்றும் வீடமைப்புத் திட்ட அமைச்சராக இருந்த காலத்தில் அவரைப்போல ஏமாற்று வேலை செய்த அமைச்சரொருவரை தான் இதற்கு முன் கண்டதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும் இன்று அதிகபட்ச ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நாட்டை இயக்கமற்ற நிலைக்குள் ஆழ்த்தி விட்டு பின்னர் பகல் நேரத்தில் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த அரசாங்கத்திற்குப் பதிலாக இன்று உண்மையில் மக்களைக் கவனிக்கும் ஒரு அரசாங்கமாகவே இருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 6 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் (09) கலந்து கொணடு பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் கட்டுவ, வெல்லவீதிய, குரண, செத்தப்பாடுவ, போருதொட்ட மற்றும் ஏத்துகால ஆகிய பிரதேசங்களில் இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின்படி பிரதமர மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் நாட்டின் 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளில் செயல்படுத்தப்படுகிறது.