ஆண்டுக்கு 3000-3500 பெண்கள் மார்புப்புற்றுநோய்க்கு இலக்காகிவருகின்றனர். எனவே அந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் நவீன சோதனை (screaning) வசதிகள் ஆரம்பமாகியுள்ளன என கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இச் சோதனையானது, கிழக்கிலங்கையில் 4 வைத்தியசாலைகளில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலைகளுக்கு சுகாதாரஅமைச்சால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதில் கல்முனை பிராந்தியத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டமை இப் பிரதேச மக்களுக்கு காலடியில் சிகிச்சை பெற ஓர் அரிய வாய்ப்பாகும்.
ஒருவருக்கு மார்புப்புற்றுநோய் இருக்கிறதா என்பதை ஒரேநாளில் உறுதிப்படுத்தமுடியும். மாதத்திற்கு ஒரு தடவை இந்த பரிசோதனை இடம்பெறும். இதற்குப் பொறுப்பாக சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சிறிநிதன் கதிரிவியக்கவியல் நிபுணர் டாக்டர் சு.டிலக்குமார் இழையவியல் நிபுணர் டாக்டர் எஸ்.காஞ்சனா ஆகியோர் செயற்படவுள்ளனர்.
இச்சேவையானது வெள்ளிக்கி ழமை (11.12.2020) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள், அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்த முடியும் எனவும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இச்சோதனையானது நோயின் தன்மை, அறிகுறிகளுக்கு ஏற்ப மூன்று பரிசோதனைகளாக (triple assessment) நடத்தப்படவுள்ளது அதாவது,
01. வைத்திய பரிசோதனை (clinical assessment)
02. உருவப்படுத்தல் (Imagery)
03. நோயியல் (pathology) என மூன்று வகைப்படுகிறது.
இச்சோதனையானது காலை 8.00- 9.30 வரை பார்வையிடப்பட்டு தேவையின் தன்மைக்கு ஏற்ப ஏனைய பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டு நோய்கள் இனங்காணப்படவுள்ளது.நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப முன்னுரிமை வழங்கப்படலாம்.
2018 தரவுகளின் படி இலங்கையில், பெண்களில், இனங்காணப்பட்ட புற்று நோய்களில், 24% மார்பக புற்றுநோயாகவுள்ளது. ஆண்டிற்கு 3000-3500 பெண்கள் இப்புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்நோ யை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சைகளை ஆரம்பிப்பதனால், பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
எனவே 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது நோய் அறிகுறிகள் தென்படும் பெண்கள்அனைவரும், இதனை பயன்படுத்தலாம்.