இரா .சம்மந்தன் தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வு என மீண்டும் மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்.

மாகாணசபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போதும் சமஷ்டி தீர்வுதான்  என கூறி; மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார். என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
 
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (28) ஊடக அறிககை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தற்போது சமஷ;டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சமஷ;டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள் தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?
 
2015ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள் தான் காரணம் என சம்பந்தன் தம்பட்டம் அடித்தார். அந்த நல்லாட்சி முழுவதும் இரா. சம்பந்தன் எதிர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடாவருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர்.
 
அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த கௌரவ மைத்திரிபால சிறிசேன, பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்கட்சி தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ;டி பற்றி பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவர் கண்களை மறைத்துவிட்டது.
 
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ;டி கொள்கையை வலியுறுத்தி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும், ஒற்றையாட்சியை வலியுறுத்தி கௌரவ மகிந்த ராஜபக்சவும் களத்தில் இறங்கி போட்டியிட்டார்கள். 49% வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் சம்பந்தன் குழுவினர் பிரச்சாரம் செய்ததால் தமிழ் மக்கள் வாக்களிக்காமலே சிங்கள மக்கள் 49% சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் மக்களை அந்த நேரத்தில் வாக்களிக்க அனுமத்தித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பார். அந்த வராலாற்றுத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்த சம்பந்தன் இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். இது பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால் தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார். 
 
தமிழ் மக்களுக்கு அவர் ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், நல்லெண்ணத்துடன் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உருவாக்கும் அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கூடவே இருந்து குழிபறித்து விடுதலைப் புலிகளை அழித்ததிற்கும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்தும் சந்தர்ப்பம் இருந்தும், வேடிக்கை பார்த்ததற்காகவும் பிராயச்சித்தமாக இதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
 
பதவி சுகத்தில் மூழ்கி இதுவரை அனுபவித்த சலுகைகள் போதும் இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவார் என்று எண்ணுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு வருடாவருடம் காவடி எடுக்கும் சம்பந்தன் தலைமை இந்த வருடம் எதைக் கொண்டு செல்லப்போகின்றார்கள்? என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related posts