சாய்ந்தமருது ஹனிபாவின் ஜனாஸாவை விடுவிப்பதில் இழுத்தடிப்பு;பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு



(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆவணத்தை மையப்படுத்தி, எதிர்வரும் 11-01-2021 திகதி திங்கட்கிழமை குறித்த வழக்கை ஆதரிப்புக்கு எடுக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றம் பணித்துள்ளது.

மேற்படி முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்தக் கோரியும் அந்த அறிக்கையின் பிரகாரம் குறித்த நபருக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதிப்படுத்தப்படுமாயின் அவரது ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோரியும் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை (06) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அன்றைய தினம் இம்மனு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை 2021-01-08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இக்கட்டளையின் பிரகாரம் குறித்த அறிக்கையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஆவனைத்தைப் இன்று பரிசீலித்த நீதிமன்றம், குறித்த ஆவணத்தை நீதிமன்ற வழக்கேட்டில் கோவைப்படுத்தியதுடன் இந்த ஆவணத்தை மையப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமையன்று (11) வழக்கை ஆதரிப்புக்காக எடுக்குமாறு பணித்துள்ளது.

இம்மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுடன் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 2020/12/21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா, அன்றைய தினமே வைத்தியசாலையில் மரணித்திருந்தார். அன்றைய தினம் அந்த உடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. எனினும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அவரது உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு  மேற்குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், அவரது பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்துமாறும் அவருக்கு கொவிட் தொற்று இல்லையெனில், உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளிக்குமாறும் அவரது குடும்பத்தினரால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை வெளியிடாமலும் உடலத்தை குடும்பத்தினரிடம்  ஒப்படைக்காமலும் தவிர்த்து வருகின்றார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அந்த உடலத்தை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு கல்முனை மாநகர முதல்வரினால் கடிதம் ஒன்று அவசரமாக கையளிக்கப்பட்டது. எனினும் ஜனாஸா விடுவிக்கப்படாதையடுத்து, இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts