மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுருவின் வீட்டில் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது தொடர்பில் 24மணி நேரத்தில் கொள்ளையினை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்(19) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஆலயத்தின் பிரதம குருவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமகுருக்களின் வீட்டில் யாரும் இல்லாதவேளையில் வீட்டின் பின்கதவினை உடைத்து வீட்டில் இருந்த தங்கம் மற்றும் காசுகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று கல்லடி,வேலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த குமாரசிங்க தலைமையில் உபபொலிஸ் பரிசோதகர் எம்.ஜி.ஐ.எம்.முகமட் ஜெஸிலியினால் இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் கொள்ளையிடப்பட்ட ஏழரை இலட்சம் ரூபா பெறுதியான ஏழரைப்பவுண் தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் உருக்கப்பட்ட நிலையிலும் நகையாகவும் இவை மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்ததும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.