உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓருமாத காலமளவில் கொவிட் வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கப்படுகின்ற நிலையில், இத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா? இதன் பக்கவிளைவுகள் எவை? இது யார் பெற்றுக்கொள்ள முடியும்? யாவர் தவிர்க்கப்படுவர்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுணரும், கிழக்குப்பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
இவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் தற்போதைய மிகமுக்கிய செய்தியாக இந்தியாவிலிருந்து வந்தடைந்துள்ள கொவிட் வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்தும் அதனை வழங்குதல் பற்றியதுமாகும். இந்தியாவிலிருந்து 500,000 மற்றும் சீனாவிலிருந்து 300,000 என எட்டு இலட்சம் (800,000) மருந்தளவு தடுப்பு மருந்து இலங்கைக்கு வரவிருக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒருவருக்கு இரண்டு மருந்தளவு எனும் கணக்கில் நான்கு இலட்சம் பேருக்கு இத்தடுப்பூசி மருந்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. இக்காரணத்தினால் மருத்துவமனைகளில் பணிபுரிவோர் மற்றும் கொவிட் வைரசுப்பரவல் கட்டுப்பாட்டுப் பணியில் முன்னிலையில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து முதற்கட்டமாக தடுப்பூசி மருந்தேற்றல் நடைமுறைப்பட்டுள்ளது. இதன்படி இராணுவ வைத்தியசாலை உட்பட சில வைத்தியசாலைகளில் தடுப்பூசி மருந்தேற்றல் ஆரம்பமாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓருமாத காலமளவில் தடுப்பூசி மருந்து வழங்கப்படுகின்ற நிலையில், இத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா, இதன் பக்கவிளைவுகள் எவை, இது யார் பெற்றுக்கொள்ள முடியும், யாவர் தவிர்க்கப்படுவர் போன்ற கேள்விகளுக்கு விடை அவசியமாகின்றது. இவைகுறித்து ஊடகங்களிலும் தகவல் கிடைக்கின்றது.
மேற்குறித்தவற்றை சற்று நோக்குவோம்;;:
பாதுகாப்பும், பக்கவிளைவுகளும்
முதற்கட்ட தடுப்பூசி மருந்து வழங்கப்பட்ட சிலநாட்களுக்குள்ளே நோர்வே நாட்டில் 33 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட செய்தி சிலநாட்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இவர்கள் அனைவருமே 75 வயதைக் கடந்தவர்கள் மற்றும் நோய்களைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இவ் இறப்புக்கள் தடுப்பூசி மருந்துடன் நேரடியாகத் தொடர்புபட்டதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோர்வே நாடு வயதான, நோய்ப் பாதிப்படைந்தவர்களுக்கு இத் தடுப்பூசி மருந்து வழங்கப்படுவது குறித்து சில அவதானங்களை எடுத்துள்ளது.
எந்தவொரு மருந்தும் பக்கவிளைவுகளை உடையது. இது மருத்துவத்துறையில் தவிர்க்க முடியாதது. பெரும்பாலானவை சாதாரணமானவை, பெரும்பாதிப்பை ஏற்படுத்தாதவை.
ஊசி ஏற்றிய இடத்தில் நோவு, வீக்கம், செந்நிறமடைதல் ஆகியவற்றுடன் காய்ச்சலும் ஏற்படுவது சாதாரணமாக அவதானிக்கப்படுகின்றது. இக்குணங்குறிகள் தடுப்புமருந்து உடலில் செயற்பட்டு நிர்ப்பீடனத் தொகுதியைத்தூண்டி, நோய் எதிர்ப்புச் சக்திக்கான பிறபொருளெதிரியை உருவாக்குவதனை சுட்டும் குணங்குறிகளாக உள்ளன. சிலருக்கு தலைவலி, உடல்வலி போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். இவை முதல் மூன்று நாட்களுக்கு அவதானிக்கக்கூடியவை.
மிகச்சிலரில் ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டமையும் அவதானிக்கப்பட்டது. ஓவ்வாமையானது மெல்லிய தாக்கமாக (Mild reaction) அமையும். சிலவேளைகளில் உயிராபத்தை ஏற்படுத்தத்தக்க அதிர்ச்சியாகவும் (Allergic Shock) அமையலாம். இத்தாக்கங்கள் ஊசியேற்றி 30 நிமிடங்களுக்குள் ஏற்படக்கூடியவை. ஆதலால் தடுப்பூசி பெறுகின்றவர்கள் அரைமணி நேரம் அவதானிக்கப்படுவர். அத்துடன் உணவிற்கோ மருந்திற்கோ ஒவ்வாமையுள்ளவர்கள் இவ் ஊசிமருந்தை பெறுவதிலிருந்து தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள், தவிர்க்கப்படுகின்றவர்கள்
ஒவ்வாமையுள்ளவர்களும், வேறு நோய்த்தாக்கங்கள் அதிகமாக உள்ளவர்களும் இத்தடுப்பூசி பெறுவதிலிருந்து தவிர்க்கப்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது. மேலும் சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் இத்தடுப்பூசி பெறுவதிலிருந்து தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறுவர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு ஏற்படவில்லை. ஆகையால் அவர்கள் தவிர்க்கப்படலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் மருத்துவ ஆலோசனைக்கமைவாக தடுப்புமருந்தேற்ற அனுமதிக்கப்படலாம் எனக்குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும் எமது நாட்டில் இவர்களுக்கு தடுப்பு மருந்தேற்றப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருமாதகாலமாக உலகநாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு கொவிட் வைரசிற்கெதிரான தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. இந்நாடுகளின் தரவுகளின்படி இந் நிகழ்ச்சித்திட்டம் பாதுகாப்பானதாகவே தெரிகின்றது. எவ்வாறாயினும் சுகாதார பாதுகாப்புமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பது இன்றியமையாதது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”