கௌரவ பிரதமரின் தலைமையில் கிராமத்துடன் கலந்துரையாடல்

கௌரவ பிரதமரின் தலைமையில் கிராமத்துடன் கலந்துரையாடல் – வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டத்தை யதார்த்தமாக்கும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு நிறுவப்பட்டது

 
•சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னர் மின் மற்றும் நீர் இணைப்புகளை வழங்கி முடிப்பதற்கு தீர்மானம்
 
•பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் பொருட்களின் விலை குறையும்
 
•கொவிட்-19 தடுப்பூசி மூலம் முழு நாட்டையும் பாதுகாத்த முதலாவது நாடு என்ற இலக்கை அடைதல்
 
கிராமத்துடன் கலந்துரையாடல் – வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.02.03) அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.
 
பொருளாதார புத்தெழுச்சிய மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய செயற்படும் இந்த தேசிய ஒருங்கிணைப்பு துணை குழுவில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
 
பிரதேச அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறைக்கு, வேளாண் துணைக்குழு, வாழ்வாதார துணைக்குழு, உட்கட்டமைப்பு துணைக்குழு, சமூக உட்கட்டமைப்பு துணைக்குழு மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு துணைக்குழு என ஐந்து தேசிய ஒருங்கிணைப்பு துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.இந்த ஒவ்வொரு குழுவிற்கும் துறை சார்ந்த ரீதியில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேசிய ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராமியக் குழு ஆகியவை மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு முடிவுகளை பாய்ச்சுவதற்கும், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு யோசனைகள் மற்றும் திட்டங்களை பாய்ச்சுவதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டினார்.
 
கிராமத்துடன் கலந்துரையாடல் செயல்திட்டத்தை நாம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியிலிருந்து செயற்படுத்தினோம். அக்காலப்பகுதியில் நாம் கிராமத்தின் குறைபாடுகளை கண்டறிந்த போதிலும் இது தொடர்பில் அரச அதிகாரிகளை பங்குபெறச் செய்ய முடியாது போனது. எனினும், தற்போது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
 
நாட்டில் 14000 கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. 36000 கிராமங்கள் காணப்படுகின்றன. அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் நாம் பணியாற்ற வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இது பெரும்பாலும் பிரதேச செயலாளர்கள் அல்லது அதிகாரிகளால் செய்யப்பட்டது.
 
அதனால் பின்வரிசை உறுப்பினர்கள் போலவே, உங்களுக்கும் கிராமம் மற்றும் வாக்காளர்களின் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான ஒரு முறை காணப்படவில்லை. இதன் விளைவாக, பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு சில நேரங்களில் அரசியல் தலைமை கிடைக்காமல் போனது.
 
வடக்கு மற்றும் கிழக்கு தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முடிவின்படி, அவற்றின் தலைவர் பதவிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
 
அதனால் எதிர்காலத்தில் அமைச்சுக்களின் ஊடாக பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது பிரதேச ஒருங்கிணைப்பு குழு ஊடாக அவற்றை செயற்படுத்துவது அவசியமாகும். அதற்காக இன்று நிறுவப்படும் இந்த தேசிய ஒருங்கிணைப்பு துணை குழுக்களின் தலைமை மற்றும் ஆலோசளை செயற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அமைச்சு மட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது சுற்றறிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு நேரடியாக வழங்குவதற்கு திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
 
அதிகரித்து செல்லும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. அதற்கமைய பருப்பு, மாவு, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 28 வகையான பொருட்களுக்கு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் எதிர்கால விலை தொடர்பில் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் இன்று காணப்படும் விலையைவிட குறைந்த விலைக்கு சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களின் ஊடாக அப்பொருட்களை நாடு முழுவதும் விநியோகிப்பதாக தெரிவித்தார்.
 
வறுமை காரணமாக வீடுகளின் அருகே மின்சாரம் இருந்தும், நீர் இருந்தும் அதனை நுகர முடியாது நிலையில் சிலர் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் சுட்டிக்காட்டினார்.ஆரம்பத்தில் மின்சாரம் அற்ற வீடுகளாக 35000 வீடுகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 125000 ஆகக் காணப்படுவதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
 
அதற்கமைய இதுவரை மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள் அற்ற வீடுகளுக்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுப்போம் என்ற திரு.பசில் ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவிற்கு அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.
 
மின்சாரம் மற்றும் நீர் வசதியற்ற வீடுகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக தீர்வை பெற்றுக் கொடுப்பது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரது கடமை என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக சமுர்தி நிதி உள்ளிட்ட அரசு ஒதுக்கீடுகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு அரச துறை போன்றே தனியார் துறை சுகாதார பிரிவினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளதாக அமைச்சர்கள் கௌரவ பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
 
பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியளவில் சாதாரண மக்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள கூடியதாகவிருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.
 
கொவிட்-19 தடுப்பூசியை வழங்குவதை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடித்த முதலாவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்தும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளதாக திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
 
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts