கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையம் வரையான நிலத்தடி எண்ணெய் குழாய் அமைப்பில் சட்டவிரோதமாக குடியேறி வசித்துவரும் 112 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொலன்னாவ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று (2021.02.17) இடம்பெற்றது.
முதலில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் அரச மரத்தடியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலையுடன் புனரமைக்கப்பட்டுள்ள அரச மர பாதுகாப்பு சுவர் என்பன கௌரவ பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வீடுகளை பெற்றுக் கொடுப்பதை குறிக்கும் வகையில் ஐந்து பயனாளர்களுக்கு கௌரவ பிரதமரினால் வீடுகளுக்கான திறவுகோல்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது தீகவாவி அருண நிதியத்திற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளினால் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்கள் இதன்போது கௌரவ பிரதமருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிவைத்தார்.35 வருடங்களுக்கும் அதிக காலமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையம் வரையான 6.5 கிலோமீற்றர் தூரத்திற்கான இடத்தில் சிலர் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருகின்றனர். அதனால் அவர்களதும், சொத்துக்களினதும், குழாய் அமைப்பின் புனரமைப்பு பணிகளுக்கும் ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் தலையீட்டுடன் ரூபாய் 500 மில்லியன் செலவில் இப்புதிய வீடுகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 125 வீடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.