மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு

நேற்றைய தினம் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு மகத்தான சாதனை படைத்துள்ளனர்.

 
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இருந்து இப்படிப் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டள்ளமை இதுவே முதன் முறையாகும்.
 
இதில் நான்கு மாணவர்கள் ”மெரிட்” அடிப்படையில் சித்தியடைந்துள்ளமை மாவட்டத்தில் மேலதிகமாக நான்கு மாணவர்கள் பொறியியற் துறைக்கு தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எந்திரி.கோபிநாத் அவர்களால் ”அனைவரையும் பொறியியலாளர் ஆக்குவோம்” என இதற்கென ஒரு விசேட வேலைத்திட்டம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்குப் பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து செயற்பட்டதாகவும் இன்று அவர்கள் அந்தக் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
23 மாணவர்கள் இவ் விசேட வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்குப் பல்வேறு வகையிலும் கல்வி, ஆளுமை மற்றும் திறன் விருத்திச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த 23 மாணவர்களுமே பல்கலைக்கழக அனுமதி பெறும் வகையில் சித்தியடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
 
மாவட்ட மட்டத்தில் முதல் 65 இடங்களைப் பெற்றுக் கொண்டவர்களில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் உள்ளனர் என்பதுடன் அவர்கள் அனைவரும் மாவட்டத்தின் கல்வி வசதி மற்றம் பொருளாதார வசதி குறைந்த தூரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts