பாலசிங்கன்.சுரேனிகா
(திருகோணமலை வளாகம் ,கிழக்குப் பல்கலைக்கழகம் )
பருவ நிலை மாற்றம் என்பது உலகின் ஒரு பகுதியிலோ அல்லது உலகம் முழுவதுமோ தட்ப வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமாகும். இதில் தீவிர பருவ நிலை மாற்றமானது, காலநிலையில் நீண்டகால இடைவெளியில் மாற்றங்கள் ஏற்பட்டு அனர்த்தங்கள் அடிக்கடி இடம் பெறுவதால் இது நீண்ட கால மாற்றம் எனப்படும்.கால நிலை மாற்றத்திற்கு கரியமில வாயுக்கள் முக்கிய காரணமாக அமைகின்றன. உதாரணமாக காபனீரொட்சைட், நைட்ரைட் ஒட்சைட், மீதென், ஓசோன் குளோரோ புளோரோ காபன் (; (CFC) )ஆகிய வாயுக்களைக் குறிப்பிடலாம்.
இவ் வாயுக்கள் தொழிற்சாலைகளாலும் விவசாய நடவடிக்கையின் போது பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளாலும் குளிர்சாதனப்பெட்டிகளின் பயன்பாட்டினாலும் அதிகளவில் வெளியாகின்றன. அந்தவகையில் அதிகளவில் வெளியேற்றும் நாடுகளாக அமெரிக்கா (19.70 மெற்றிக் தொன்), ரஷ்யா (11 மெற்றிக் தொன்), ஐரோப்பா (9.7 மெற்றிக் தொன்), இந்தியா (1.3 மெற்றிக் தொன்)ஆகியன காணப்படுகின்றன.தனி நபர் காபன் உமிழ்வில் சீனா,அமெரிக்கா,இந்தியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
இவ்வாறு கரியமில வாயுக்கள் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களாக வட,தென் துருவ பனிக்கட்டி உருகுதல், கடல்மட்டம் உயர்தல், உலக கரையோரப் பகுதி நீரில் மூழ்குதல், தரை நிலம் தாழ்வடைதல், இயற்கை அனர்த்தம் அதிகரித்தல் என்பனவற்றைக் குறிப்பிடலாம். மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் முதன்மைப் பாதிப்புக்களாக புவி வெப்பமயமாதல், முனைவு மற்றும் உயர்மலைப்பனி உருகுதல்,தொடர்ச்சியான வறட்சி ஏற்படல், வானிலை மாற்றம், கடல் நீர் வளம் உயர்வடைதல் என்பன ஏற்படும். காலநிலை மாற்றத்தின் பிரதானமான சவால்களாக மனித சுகாதாரம், மனித பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதார வளர்ச்சி வீதம் முதலானவை பாதிப்படைதல், நீர் மூலமான நோய்கள்,ஊட்டச்சத்துக்குறைபாடு,மீன் இனப்பெருக்கம் பாதிப்படைதல் என்பவற்றைக் கூறலாம்.
காலநிலை மாற்றத்தின் விளைவை உடனடியாக தடுக்க முன்வைக்கும் முதன்மைத் தீர்வுகளாக கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுத்தல், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை நோக்கி நகருதல் என்பனவாகும். உலக அளவில் புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றலை,கடலலை,சூரியசக்தி மூலம் நாடுகள் மின்வலுவை உற்பத்தி செய்கின்றன. சீனா, அமெரிக்கா,பிறேசில் இந்தியா ஆகிய நாடுகள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் முதன்மை நாடுகளாகும்.அந்த வகையில் காற்றலை மூலம் மின்னுற்பத்தியை சீனா, அமெரிக்கா,ஜேர்மன்,இந்தியா ஆகிய நாடுகள் மேற்கொள்கின்றன. சூரிய சக்தி மூலமாக மின்வலுவை உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, அமெரிக்கா,ஜப்பான்,இந்தியா,ஜேர்மன் போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன
பூகோள வெப்பமயமாதலை தடுக்க கியோட்டோ ஒப்பந்தம், Cop21, Rio +201020 ஆகிய ஒப்பந்தங்கள் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகளை ஒருங்கிணைத்துச் செயற்படும் சர்வதேச அமைப்புக்கள் ஐநாவிற்கான பருவநிலை மாற்ற சாசன கட்டளை (UNFCC) பருவ நிலை மாற்றம் பற்றி ஆராயும் அரசுகளிற்கிடையான குழு (IPCC) போன்றனவாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் பிரதானமாக நெற்செய்கை,பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, பாற்பண்ணைத்தொழில் விவசாயத்தைச் சார்ந்து பாதிக்கப்படும் துறைகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் வட மாகாணம், வடமேல் மாகாணம் என்பனவற்றின் வெப்பநிலை உயர்வடையுமெனக் கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் வறுமையளவு அதிகரித்தல், சமூக சமத்துவமின்மை, மக்களின் வாழ்க்கைத்தரம் குறைவடைதல் போன்ற சமூகப் பாதிப்புக்கள் ஏற்படும். மேலும் பொருளாதாரம் சார் பாதிப்புக்களாக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடையும், தனி நபர் வருமானம் குறைவடையும் நிலை ஏற்படும். மேலும் சூழலியல் மாற்றங்களாக அதிகரித்த வெப்பநிலையும் வரட்சியும் மழைவீழ்ச்சியில் மாற்றம் என்பன ஏற்படும்.
இம் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் விசேட வேலைத்திட்டங்களாக இலங்கையில் உலர் வலய சிறு குளங்களைப் புனரமைத்தல், தரைக்கீழ் நீர்வளம் பேண மர நடுகை செயற்றிட்டம் (ஹரித லங்கா) உற்பத்தித் தரத்தை அதிகரிக்க நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தல், சந்தைப்படுத்தல் வசதியை விரிவாக்கம் செய்தல் என்பனவாகும். காலநிலை மாற்றத்தை தவிர்க்க இளம் சந்ததியினருக்கு முன்வைக்கப்படும் ஆக்க பூர்வமான ஆலோசனைகளாக நுகர்வு கலாசாரத்தை மாற்றியமைத்தல் (காபன் எதிர் நுகர்வு) பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சந்தை சக்திகளை பயன்படுத்தல். உதாரணமாக கலப்புப் பிறப்பாக்கம்(;(Hybrid, மின்சார கார் பயன்பாடு, பூச்சிய காபன் வெளியீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தல், வளியிலுள்ள காபனைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்தல் ,புதுப்பிக்கத்தக்க வளப்பயன்பாட்டை அதிகரித்தல் என்பனவாகும்.மேலும் காலநிலை மாற்ற விளைவுகளை தாக்குப் பிடிக்க பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆக்க ©ர்வமான நடவடிக்கைகளாக விவசாயத்துறை சார் தொழில் வாய்ப்பை உருவாக்குதல் காலநிலையியலுடன் தொடர்பான தொழில் வாய்ப்பை உருவாக்குதல்,சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தல் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
சுற்றுப்புறச் சூழலுக்கு ஒவ்வாத செயல்கள் செய்வதை இயன்றளவு தவிர்ப்பதன் மூலமும் தடுப்பதன் மூலமும் நாமும் நம் எதிர்கால சந்ததியினரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களைக் குறைப்போம்.