கொரோணா காலத்தில், உயிர்களையும் துச்சமாக மதித்து கடுமையான தியாக சிந்தனையுடன் கூடிய சேவையை வழங்கிவரும் சுகாதாரப்பிரிவு ஊழியர்களின் மனதை நோகடித்து, அவர்களின் சேவை வழங்கும் நிலையில் தடுமாற்றத்தை உண்டாக்கும் அரசியல் ஆதாய ஏற்படுகள் தான் மாநகர சபைக்கு எதிராக அண்மையில் மாநகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும் என கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே. எம். அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையினால் முறையாக மனித கழிவுகள் அகற்றப்படுவதில்லை என குற்றம் சாட்டி கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன், க.சிவலிங்கம் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரியநீலாவணையில் அமைந்துள்ள இஸ்லாமிக் ரீலீப் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட கழிவறை நிரம்பும் பிரச்சினையை தீர்க்க அங்கு எங்களின் சபைக்கு சொந்தமான கனரக வாகனங்களை கொண்டு பாரியாளவிலான குழியை தோண்டி அதில் அந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அந்த வேலைகளின் போது எரிபொருள் நிரப்ப வந்த எங்களின் மாநகர சபை வாகனம் கல்முனை பிரதான பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் அதற்கெதிராக கருத்து வெளியிட்டனர். அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து கல்முனை பிரதான பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை அடைப்பு எடுக்கும் பணியும் இடையில் நிறுத்தப்பட்டது.
முதல்வர், ஆணையாளர், சுகாதாரக்குழுவினர், பூரண ஒத்துழைப்புடன் இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நன்மை கருதி திண்மக்கழிவகற்றல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறோம். இவ்வாறான நிலையில் சிறிய அளவிலான விடயங்களை பெரிதாக்கி அரசியல் செய்வதன் மூலம் மக்களுக்கு சிறந்த வினைத்திறனுடன் கூடிய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. சுகாதார துறை ஊழியர்களின் பணியை சுதந்திரமாக செய்ய விடாமல் அவர்களுக்கு இடைஞ்சல்களை உண்டாக்குவதன் மூலம் அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பாதிக்கப்பட போவது யார் ? மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைகளையே நாங்கள் செய்து வருகிறோம். அதனாலையே கல்முனை பிரதான பேருந்து நிலைய கழிவறை அடைப்பையும் மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த பயணத்தடை நாட்களில் செய்தோம்.
கல்முனை மாநகர சபை முதல்வர், பிரதி முதலவர், ஆணையாளர், கணக்காளர், நிர்வாக பிரிவு, பொது நூலகம், பிரதான பேருந்து நிலையம், சுகாதார பணிமனை உட்பட பல முக்கிய அலுவலகங்கள் உள்ள இந்த இடத்தில் யாராவது மனித கழிவுகளை கொட்டுவார்களா? இந்த விடயம் அரசியல் ஆதாயத்தை முன்னிறுத்தி செய்ததாகவே நோக்கவேண்டியுள்ளது. எங்களின் கழிவகற்றும் நடவடிக்கைகள் இப்போதும் பெரியநீலாவனையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை யாரும் சென்று பார்க்கலாம். தியாக சிந்தனையுடன் அர்ப்பணிப்பாக சேவையாற்றும் ஊழியர்களை யாரும் மனஉழைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.