மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் நியமனம் தொடர்பில் பொய் பரப்புரைகளை ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் முன்னெடுத்துவருவதாக அவரின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும்,அவர் தனது கருத்தினை வாபஸ்பெறவேண்டும் என்று கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்,வைத்தியர்கள்,சுகாதார சிற்றூழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்றைய போராட்டத்தில் பங்குகொண்டனர்.இதன்போது பரப்புரைகளை ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் ரவி குமுதேசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ” தவறான வார்த்தை பிரயோகத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்”,”தகைமைபற்று பேசுவதற்கு நீ யார்” ,”இனமதமொழி கடந்து சேவையாற்று” ,” ரவி குமுதேஸ்!எல்லை கடந்த பேச்சை நிறுத்து!!! போன்ற வாசகங்கள் பொருத்திய பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
கொவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பணிப்பாளரை கேவலப்படுத்தும் வகையில் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், குறித்த கருத்துகளை அவர் வாபஸ்பெறவேண்டும் என்பதுடன் பணிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்புக்கோரவேண்டும் எனவும் இங்கு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவரின் கருத்தானது பணிப்பாளரை நியமனம் செய்துள்ள ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு எதிரான கருத்து எனவும்,இது முழு சுகாதார துறையினையும் கேவலப்படுத்தும் வகையிலான கருத்து எனவும் போராட்டத்தில் கலந்துகொண்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.