யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது, அங்கு சென்ற பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது சுதர்ஷன் என்ற 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் பொலிஸாருடனும் மக்களுடனும் கலந்துரையாடினார். அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரையும் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். விசாரணையின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அத்தோடு, சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கலகத்தில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு அங்கு நின்றவர்களை நோக்கியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உயிரிழந்த இளைஞனுக்கு, அங்கு இடம்பெற்ற கலவரத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், விசாரணையின் பின்னரே உறுதியான தகவல்களை வழங்க முடியுதென வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.