வடகிழக்கு தமிழர்கள் தொடர்ச்சியாக கடனாளியாக வாழும்நிலையில் உள்ளார்கள். சீ.யோகேஸ்வரன் தெரிவிப்பு.

வடகிழக்கு தமிழ்மக்களின் பொருளாதார பொறிமுறை நுண்கடன் நிறுவனங்களால் அழிப்பட்டுள்ளது.தமிழ்மக்கள் இன்று கடனாளியாக வாழும் நிலையேற்பட்டுள்ளது.நுண்கடன் பிரச்சனையில் இருந்து தமிழ் சமூகம் முன்னேற வேண்டுமாயின் வடகிழக்கில் தொழில் பேட்டைகள் உருவாக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி-யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நுண்கடன் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அவரிடம்  திங்கட்கிழமை (18.6.2018)  அவரது அலுவலத்தில் அவரை சந்தித்து கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-

கடந்தகால யுத்தத்தினால் வடகிழக்கில்  அழிவடைந்துள்ள கைத்தொழில் பேட்டைகளை மீள் புனரமைப்பு செய்து வறுமைப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.பெண்கள் சுயதொழில் செய்தால்தான் நுண்கடன் நிறுவனங்களை மாவட்டத்திலிருந்து விரட்டமுடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்டூர் தொழிற்சாலை,வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைகள் கடந்த யுத்தத்தினால் அழிவடைந்து செயலிழந்து காணப்படுகின்றது.இவற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் செய்தார்கள்.இன்று பலர் தொழில் இல்லாமல் வாழ்கின்றார்கள்.யுத்தத்தினால் தமிழ் சமூகம் பொருளாதாரத்தை இழந்துள்ளது.இதனால் தமிழர்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் பின்னடைவுகளை சந்தித்துள்ளார்கள்.

இந்தப்பொருளாதார பின்னடைவுகளினால் வறுமையானவர்கள் தமிழர்கள்தான்.இதனை சாதகமாக பயன்படுத்தி தமிழர்கள் வாழும் வடகிழக்கு பகுதியில் நுண்கடன் நிறுவனங்கள் கடன் என்று தமிழர்களின் பொருளாதார பொறிமுறையை அழிக்கத் திட்டமிட்டுள்ளது.ஒன்றும் தெரியாத பாமரமக்களை நுண்கடன் வழங்குவது பிழையான காரியமாகும்.அவர்களுக்கு கடனுக்கு எவ்வளவு வட்டி பெறுகின்றார்கள் என்று தெரியாது.இந்த நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கில் அதிக வட்டி அறவிடும் நுண்கடன் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தமது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.கடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.

எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடகிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.தமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும் வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும் என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடிவாகும்.எனவே, தமிழர்களின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா? சுதந்திரமா? என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.

உதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்து விட்டால் தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு.தமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாகவே இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts