37வருட கல்விச்சேவையிலிருந்து அதிபர் அகிலேஸ்வரன் ஓய்வு

மட். முதலைக்குடாவைச் சேர்ந்த பிரபல சமுகசேவையாளரும் அதிபருமான சிவஞானம் அகிலேஸ்வரன் தனது 37வருட கல்விச்சேவையிலிருந்து 60ஆவது வயதில் இன்று(24) ஓய்வுபெற்றார்.
 
இவரது சேவைக்காலத்தில் கொக்கட்டிச்சோலை( மண்முனை தென்மேற்கு) பிரதேசசபையின் தவிசாளராகவும் கொக்கட்டிச்சோலை ப.நோ.கூ.சங்கத் தலைவராகவும் மகத்தான மக்கள்சேவையாற்றியுள்ளார்.
 
இவர் முதலைக்குடாவில் புகழ்பூத்த குடும்பமான புகையிரதநிலைஅதிபர் ஆ.சிவஞானம் ஆங்கிலஆசிரியை பொ.மங்களேஸ்வரி தம்பதியினருக்கு 25.05.1960இல் பிறந்தார்.
 
முதலைக்குடாவில் ஆரம்பக்கல்வியைப்பெற்ற அவர் இடைநிலை மற்றும் உயர்கல்வியை மட்.சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றார். 1983இல் கணிதவிஞ்ஞான ஆசிரியராக பரீட்சையில் தேர்வாகி அம்பிளாந்துறையில் பதவியேற்றார்.
 
பின்பு 1986.87களில் மட்.ஆசிரியர்கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக முதலைக்குடாவில் கற்பித்து அதிபர்பரீட்சையில் சித்திபெற்று முதலைக்குடா மகாவித்தியாயலம் மற்றும் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபராக சிறந்த பணியாற்றினார். ஆசிரியை வேலுப்பிள்ளை நளினியைக் கரம்பிடித்தார்.
 
இவரது காலத்தில் பாடசாலைக்கு காணிபெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் இரண்டுமாடி ஆய்வுகூட கட்டடங்களையும் பெற்றெடுத்தார்.
1994முதல் 199வரை 5வருடகாலம் கொக்கட்டிச்சோலை பிரதேசசபையின் தவிசாளராகவிருந்து பின்தங்கிய அம்மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றினார்.
 
குறிப்பாக கொக்கட்டிச்சோலைக்கு வரலாற்றில் முதற்தடவையாக மின்சாரம் பெற்றமை உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்தியமை மகிழடித்தீவு மருந்தகத்தை மகப்பேற்றுமனையாக மாற்றியமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
 
2006முதல் 2013வரையான காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை மண்முனை தென்மேற்கு  ப.நோ.கூ.சங்கத்தலைவராக இருந்தகாலத்தில் நெக்கோட் திட்டத்தின்கீழ் லொறியொன்று பெற்றமை நெக்டெப் திட்டத்தின்கீழ் நெற்களஞ்சியசாலையை அமைத்து நெல்கொள்வனவை மேற்கொண்டமை உரமானியத்தை ஆரம்பித்தமை போன்ற காரணங்களால் மட்டு.மாவட்டத்தில. முதலாந்தர ப.நோ.கூ.சங்கமாக பாராட்டப்பட்டது.
 
2000ஆம் ஆண்டில் தேசியஜக்கிய முன்னணி சார்பில் பாராளுமன்றதேர்தலிலும் 2018உள்ளுராட்சித்தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts