ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பினுடைய 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலிலே விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்டு இறுதியில் தனது உயிரையே தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்.
இலங்கை முஸ்லிம் மக்களின் என்றும் அழியாத மாபெரும் தலைவரே மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் சிறந்த உதாரண புரிசராக இருந்த அஷ்ரப், 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முஹம்மது ஹுசைன், மதீனா உம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
கல்முனையில் வளர்ந்த அஷ்ரப் அவர்கள் கல்முனை அல்-அஸ்ஹர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் பின் உயர்நிலை கல்வியை கல்முனை பற்றிமா, உவெஸ்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் தனது பட்டப் படிப்பை இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று 1975 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பட்டம் பெற்றார்.
தனது ஆரம்ப காலம் தொட்டே அவர் தலைமைத்துவ ஆளுமை, ஆன்மீகம், இலக்கியம், சட்டம் என பல்துறை ஆளுமை மிக்க வராக திகழ்ந்தார். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள். அதற்கேற்றாற்போல் பாடசாலைகளில் கவிதை எழுதுதல், மேடைப் பேச்சு போட்டியில் பங்கேற்றல் போன்ற பல நிகழ்வுகளில் பங்குபற்றி தன்னுடைய இளமைக்காலம் தொட்டே பல சாதனைகளை படைக்கக் கூடியவராக காணப்பட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சேவை செய்த சிறந்த சமூக சேவகன் என்று கூறுவது சாலப் பொருத்தம் என்றே நாம் கூறமுடியும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை மேலும் நெருக்கமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். அதுபோன்று மூவின மக்களுக்கும் சிற்நத சேவையாற்றிய ஒருவர் அஷ்ரப் என்பதில் துறைமுக துறை அமைச்சராக இருந்த காலத்தில் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கானவர்கள் துறைமுக ஊழியர்களாக பணியர்த்தப்பட்டது இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அதுபோல் ஒலுவிலிலே துறைமுக எனும் செயற்திட்டம், ஒலுவில் பல்கலைக் கழகம் என பல்வேறு வரலாற்று சேவைகளை செய்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிஹொப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். இலங்கையின் மூவின மக்களாலும் இவரது இழப்பை ஜீரணிக்க முடியாத நிலை அக்காலத்தில் காணப்பட்டது. அதுபோன்று இன்று வரையும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தினை எவராலும் ஈடுசெய்ய முடியாமல் முஸ்லிம் அரசியல் இன்று அநாதையாக்கப்பட்டுள்ளது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
சமூகப் பிரச்சினைகள் வரும்போது தன்னுடைய அமைச்சுப் பதவிகளைத் தூக்கியெறிந்து ஆட்சியாளர்களுக்கு சவால்விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவ பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப்.
குறிப்பாக, பெரும்பான்மைக் கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவதாக எதிர்கொண்ட 1987ஆம் ஆண்டு உள்ளூராட்ச்சித் தேர்தலில முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் களத்தில் குதித்தது.
அவர் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தினார். ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுடன் முஸ்லிம் சமூகம் கைகோத்திருப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டார். அதனை அவர் பல சந்தர்பங்களில் சாதித்தும் காட்டியிருந்தார்.
நாட்டின் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருப்பார்களாயின் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனும் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது இணைந்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களுடைய எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் அல்லது கிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்தார். 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷமாக இதுவே முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.
1983 ஜூலைக் கலவரத்தை தொடர்ந்து இனப்பிரச்சினைக்கான அதிகார பகிர்வு விடயத்தில் இந்தியாவின் அழுத்ததின் காரணமாக இலங்கை அரசு ஒரு பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. அப் பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் கலாநிதி பதியூதீன் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இயங்கிய ‘முஸ்லிம் கவுன்சில்’ என்ற அமைப்பின் பிரதிச் செயலாளர் பதவியை வகித்த அஷ்ரஃப் அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இது அவரின் அரசியல் ஆளுமைக்கு மிகப்பெரிய சான்றாகும்.
இன்றைய காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் தளம் உறுதியாக காணப்பட வேண்டும். அதன் பாதை நவீனத்துவம் அடைய வேண்டும். மக்களின் அபிப்பிராயம் வென்ற அரசியல்பாதை இன்றைய காலத்திற்கு மிக அவசியமாக உள்ளது. அரசியல் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.சமுகத்தின் இருப்பு, உரிமை போன்ற எல்லா விடயங்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆயுதமாக உள்ளது.
மர்ஹூம் அஷ்ரபின் பாதையில் வந்தவர்களால் அவரது நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்கின்ற விடயத்தில் விடை பூச்சியப் புள்ளியிலிருந்து மெலெழ முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது.
எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் இருப்பினையும் அவர்களின் அபிவிருத்தி இலக்குகளையும் அடைவதற்கான வழியில் பயணிக்க வேண்டுமென்ற ஒரு ஞாபமூட்டலை முஸ்லிம் தலைவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் விடுக்க விரும்புகின்றோம். அதுவே மர்ஹூம் அஷ்ரபிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செலுத்துகின்ற நன்றியும் கடனுமாகும்.