காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? உங்களிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஐநா உரை மற்றும், ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் சந்திப்பு போன்றன தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலரிடம் இரண்டு முகங்கள் இருக்கும். ஒருவருக்கு ஒரு முகமும், இன்னொருவருக்கு இன்னொரு முகத்தையும் காட்ட முடியும். ஆனால் இந்த ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் பல முகங்களை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விருப்பமான முகத்தைக் காட்டிக் கொள்கின்றார்கள். அந்தவகையிலே ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சென்று உரையாற்றும் போது ஏதோ தான் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத் தயாராக இருப்பதாகவும், புலம்பெயர் அமைப்புகள் என்னுடன் பேச வாருங்கள், இலங்கைக்கு வாருங்கள் என்றெல்லாம் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
உண்மையிலேயே மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியிலே புலம்பெயர் பல அமைப்புகளுக்கும், புலம்பெயர் நாடுகளில் வாழும் பலருக்கும் தடையுத்தரவு விதித்தவர்கள் இவர்கள். 2015ல் ஏற்பட்ட நல்லாட்சியில் அந்தத் தடையுத்தரவுகள் தளர்த்தப்பட்டாலும், கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்பு மீண்டும் அவர்களுக்குத் தடையுத்தரைவைப் போட்டுவிட்டு தற்போது இலங்கைக்கு வாருங்கள் என்னுடன் பேசுங்கள் என்பது ஒரு வேடிக்கையான விடயம்.
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? தங்களது மனைவிமார், பெற்றோர்கள் முன்னிலையில் அவர்களினால் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள், முன்னணிப் போராளிகள், முக்கிய விடுதலைப் போராட்ட இயக்கமான ஈரோஸின் தலைவராக இருந்த பாலகுமார் மற்றும் அவரது மகன் போன்றோலெல்லாம் உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள் என்பதுதான் உண்மை. எனவே நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள். நீங்கள் அப்பட்டமான கொலையைச் செய்து விட்டு அவர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுக்கின்றீர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள். என்ற வகையிலேயே இந்த மரணச் சான்றிதழ் விடயத்தை நாங்கள் பார்க்கின்றோம்.
அதற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஐரேர்பிய ஒன்றியப் பாராளுமன்றம் உங்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை அடுத்த சித்திரையில் இருந்து நிறுத்துவதற்கு இருக்கின்றார்கள். அதற்கிடையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கேட்டுள்ள விடயம் பயங்கரவாத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது அல்லது அதில் ஏதாவது திருத்தத்தைக் கொண்டு வருவதல்ல, முற்றுமுழுதாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.