இன்று இனவாதம் பேசினால் அந்த இனமே அவரை ஒதுக்குகின்ற நிலை!அரசியல் என்ற சாக்கடைக்குள் சுத்தம்செய்யவந்தவனேயன்றி குப்பைகொட்டஅல்ல!

இன்று இனவாதம் பேசினால் அவர் சார்ந்த அந்த  இனமே அவரை ஒதுக்கிதள்ளுகின்ற நிலை வந்துள்ளது. அடிமட்ட மூவினமக்களும் நாட்டில் ஒன்றாகவே வாழவிரும்புகிறார்கள் என்பதே அதன் அர்த்தம். அன்பினால் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் ஆனந்தத்தைத்தரும். உங்களை வாழ்த்துகிறேன்.
 

இவ்வாறு மாளிகைக்காடு முஸ்லிம்கள்மத்தியில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவுக்குட்பட்ட ,மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மாளிகைக்காடு மொத்த மீன் வியாபார வர்த்தக சங்கத்தின் அனுசரணையோடு ,கொரோனா நோயிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான விழிப்புணர்வு பதாதைதிறக்கும்  நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
 
அந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டுரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அந்நிகழ்வு மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்திலுள்ள அமைப்பின் காரியாலயத்தில் தலைவர் எம்.இம்தியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன் கொரோனா ஒழிப்பு பதாகையை திரைநீக்கம் செய்ததுடன் நூர் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி மஜீட்டின்  துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் ,விசேடஅதிதிகளாக மாளிகைக்காடு மொத்த மீன் வியாபார வர்த்தக சங்கத் தலைவர் எம்.நெளஷாத் ,காரைதீவு பொலிஸ் நிலையப் பிரதிநிதி,  இசட்.சி.சிஅமைப்பின் தலைவர் எம்.எச். நாஸர் ,கிராம உத்தியோகத்தர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்:
 
நான் அரசியல் என்ற சாக்கடைக்குள் சுத்தம் செய்ய இறங்கியவனே தவிர குப்பைகொட்ட அல்ல . நான் அரசியலுக்குவரமுன்பே இப்பிராந்தியமெங்கும் எனது தொழிலால் நன்கு அறியப்பட்டவன்.மாளிகைக்காட்டில் நிறைய நண்பர்கள் எனக்குள்ளனர்.
 
சிலர் தமது அரசியலை வளர்ப்பதற்காக என்மீது அபாண்டமான பழியையும் குற்றசாட்டுகளையும் சொல்லி சேறுபூச புறப்பட்டார்கள்.ஆனால் பள்ளிவாசல் சம்மேளனம் பள்ளியில் இருந்தவர்கள் கண்ணியமாகசெயற்பட்டு அக்களங்கத்தை போக்கினார்கள். அறிக்கைவிட்டவர்களும் முகநூல்போராளிகளும் ஏமாந்தனர்.
 
நான் என்றும்  மதத்தையும் இனத்தையும் மதிக்கின்றவன். இருஇனங்கள் வாழ்கின்ற எமது சபையை மிகவும் கண்ணியமாக கவனமாக நடாத்திவருகிறேன்.  என்னையறிந்த அனைவருக்கும் தெரியும்.வேண்டுமென்றே சேறுபூச விளைகின்றவர்களுக்கு என்னால் பதிலளிக்கமுடியாது.
 
வீட்டிலிருந்துகொண்டே பாராளுமன்ற உறுப்பினராக தொடந்துவரும் எமது தலைவர் சம்பந்தன் இனவாதமற்றவர். அவர்வழிவந்த நாங்களும் அப்படியே. நாம் இனமதம் கடந்து பயணிக்கவேண்டும். மாளிகைக்காடு மயானம் கடலரிப்பால் காவுகொள்ளப்பட்டவேளை நான் களத்தில் நின்றதை நீங்கள் அறிவீர்கள். என்னிடம் இனவாதமில்லை.
 
தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏதாவது முரண்பாடுகள் வரும்போது வட்டமேசையில் இருந்து பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும். அதைவிடுத்து அறிக்கைகளும் முகநூலும் ஓருபோதும் இனஉறவைக்கொண்டுவராது. இருஇனங்களும் சந்தேகம் வராதபடி அனைவரும் நடந்துகொள்ளவேண்டும்.
 
உன்னதமான இறுதிக்கிரியை அதாவது ஜனாசா சேவையைசெய்யும் உங்களுக்கு என்னாலான முழுஉதவியையும் செய்வேன். என்றாhர்.
 
 

Related posts