எத்தனை பட்டங்களை பெற்றாலும் ஒழுக்கம் இல்லாதவனை சமூகம் ஏற்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.
பரீட்சைகளில் சித்திபெற்று பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகவும், புத்திஜீவிகளாகவும் பட்டங்களை பெற்றாலும் ஒழுக்கம் இல்லாதவனை சமூகம் மதிக்காது என்பதே நாம் வாழ்க்கையில் கண்ட உண்மை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், உதயகுமார் கல்வி நிலைய தலைமை ஆலோசகருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கடந்த 2020, க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை உதயகுமார் கல்வி நிறுவனம் மூலம் அதிபர் அ.விக்கினேஷ்வரன் தலைமையில் இன்று(2) இடம்பெற்ற பாராட்டு் நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்.
மாணவர்களை ஆசியர்கள் கற்பித்தல் செய்யும்போது மாணவர்களின் ஐந்து புலன்களும் ஆசியர்கள் கற்பிக்கும் பாடத்தின்மீது கவனம் செலுத்தவேண்டும்.
வெறுமனமே மாணவர்கள் பரீட்சைக்கான கல்வியில் சித்திபெற்று வாழ்க்கைக்கான கல்வியாக அறிவை பயன்படுத்தவேண்டும்.
கல்வியில் மாணவர்களை உயர்த்தவேண்டும் என்ற சிந்தனையில் எமது படுவான்கரை பெருநிலம் கற்சேனை கிராமத்தில் பிறந்து முனைக்காடு கிழக்கில் திருமணம் முடித்து இன்று மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரியும் தமிழ்தேசிய பற்றாளனான தம்பி உதயகுமார் தனது தனி முயற்சியால் அவரின் சொந்த மாத வேதனத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கை கல்வியின் வளர்ச்சிக்காக செலவிட்டு மாணவர்களின் கல்வி செயல்பாட்டை படுவான்கரை பெருநிலத்தில் ஊக்குவிக்கும் திட்டமாகவே அவரால் உருவாக்கப்பட்டது இந்த” உதயகுமார் கல்வி நிறுவனம்” முனைக்காட்டு கிராமத்தில் இதற்கான அலுவலகத்தை ஏற்படுத்தி அளப்பரிய சேவையாற்றி வருகிறார்.
அந்த கல்வி நிறுவனத்திற்கு என்னை தலைமை ஆலோசகராக நியமித்து எனது ஆலோசனைகளையும் உள்வாங்கி பல கல்வி சமூக செயற்பாடுகளை முன்எடுத்து வருகிறார்கள்.
மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்விச்செயல்பாடுகளுக்கு முதல் கட்டமாக சில உதவிகளை வழங்குவதுடன் காலப்போக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களின் பாடசாலை மாணவர்களுக்கான வசதிகளை செய்வதும் உதயகுமார் கல்வி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயம் கடந்த 2020, க.பொ.த சாதாரண பரீட்சையில் 10, மாணவர்கள் பரீட்சையில் தோற்றி அந்த பத்து மாணவர்களும் சித்தி பெற்று கிழக்கு மாகாணத்தில் நூறுவீத சித்திபெற்ற ஒரே ஒரு பாடசாலையாக திகழ்வது எமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.
இந்த நிகழ்வில் உதயகுமார் கல்வி்நிலைய செயலாளர் ம.ஜெயக்கொடி, மக்கள் நல ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.மாணவர்களை கௌரவித்து கல்வி உபகரணங்களும் பரீசில்களும் வழங்கப்பட்டன.