ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரரால் நிச்சயமாக வேட்பாளராக முடியும்

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரரால் நிச்சயமாக வேட்பாளராக முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கி விசேட செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தாம் தலைமைத்துவம் வழங்குவதாகத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமக்குள்ள இயலுமை தொடர்பில் கருத்துகள் வௌியாகி வருவதாகக் கூறியுள்ளார்.

எனினும், அது நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயம் என்பதால், அது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், மாற்று வழிமுறையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு வேட்பாளரை நிறுத்த முடியும் என்பதே அவரது கருத்தாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு 35 வயது பூர்த்தியாக வேண்டும் என உள்ளடக்கப்பட்ட சரத்து காரணமாக, தமது புதல்வரால் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ, நிச்சயமாக தமது சகோதரருக்கு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கட்சியும் கூட்டமைப்பும் மக்களுக்கு தேவையானவர் யார் என்பதை தீர்மானிக்கும் எனவும் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தோல்விக்கு இந்தியாவின் ‘ரோ’ அமைப்பு தலையீடு செய்ததாக ஏற்கனவே வௌியிட்ட கருத்து தொடர்பிலும் ‘த ஹிந்து’ பத்திரிகை மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கூற்றின் ஊடாக தாம் ரோ அமைப்பு மாத்திரமல்லாது சர்வதேச தலையீட்டையே சுட்டிக்காட்டியதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ட்ரொய்கா எனும் பெயரில் இலங்கை மற்றும் இந்தியாவின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் இரவு பகல் பாராது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதாகவும் அத்தகைய கட்டமைப்பொன்று தற்போது இருக்க வேண்டும் எனவும்
முன்னாள் ஜனாதிபதி ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியா நெருங்கிய உறவினர் மற்றும் அயலவர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, சீனாவை நீண்ட கால நண்பராகக் கருதி செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

சீனாவுடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் அபிலாஷையை மறக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

Related posts