முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் சிறப்பானது கந்தசஷ்டி விரதமாகும்.

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(10) இடம்பெற்ற கந்தசஷ்டி விரத இறுதி நாள் பொங்கல் விழா நிகழ்வில் பக்தர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
 
கந்தஷ்டி விரத மகிமை
நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. ஒருநாள் சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பெண் அவரிடம் தன் குறையைச் சொன்னாள். ‘குடம் பிடித்தான், சட்டி கொள்!” என்றார் சித்தர்.
 
சித்தர்கள் சூட்சுமமாகப் பேசுவார்கள். அப்பெண் படிப்பறிவில்லாதவள். குடம் பிடித்தானையும், சட்டி கொள்வானையும் எங்கு போய்க்காண்பாள்? சித்தர் சொன்னதன் பொருள் அவளுக்கு புரியவில்லை. குழம்பித் தவித்தாள்.
 
மாம்பழக் கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பெண் அவரிடம் சென்று, ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள் என்று ஒரு சித்தர் சொன்னார். அதன் பொருள் என்ன?” என்று கேட்டாள். அதற்குப் புலவர், குடம் என்பதைக் குக்குடம் என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் சேவல் என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?” என்று கேட்டார்.
 
‘தெரியும் ஐயா. அவர்தான் முருகக்கடவுள்” ‘ஆம். சட்டி என்பது ‘கந்த சஷ்டி’ என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்து வா!” என்றார் புலவர். அப்பெண் ‘அப்படியே செய்கிறேன்’ என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள். கந்த சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக அழகன் முருகனைப் போலவே அந்த பெண் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். 
 
கடந்த 05.11.2021 திகதி ஆரம்பமான கந்தசஷ்டி விரதமானது தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆறாவது நாளான இன்று பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts