யானைகளின் தொல்லைகளால் அச்சத்தில் வாழும் நாவிதன்வெளி, வீரச்சோலை கிராம மக்கள்

நாவிதன்வெளி, வீரச்சோலை கிராம மக்கள் காட்டுயானைகளின் தொல்லைகளால் தினமும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் மாலை வேளைகளில் ஊருக்குள் புகும் காட்டுயானைகள் இரவு முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் உடமைகளை சேதப்படுத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தங்கராசா சிவலிங்கம் என்பவருடைய அரிசி ஆலைக்குள் புகுந்த காட்டு யானை அரிசி ஆலையின் சுவரை உடைத்து இயந்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இயந்திரங்களை கொண்டு இயங்கும் இந்த ஆலையினூடாகவே தங்களது ஜீவனோபாயம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் இரண்டாவது தடவையாக யானையின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வனவிலங்கு இலாக்காவிற்கு அறிவித்தும் அவர்கள் வருகை தரவில்லை. இதனால் மக்கள் உயிர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால இவ்விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை பிரதேச மக்கள் குறிப்பிடுகையில், யுத்தகாலத்தில் கூட காட்டு யானைகள் தொல்லை இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது இந்த யானைகளால் எமது விவசாயம் முற்றாக சேதமாகியுள்ளது.

மேலும் அறுவடை செய்து உணவிற்காக வீட்டிற்குள் வைத்துள்ள நெல்மூட்டைகளை கூட யானைகள் விட்டு வைப்பதில்லை. இரவில் வயல்வெளிக்கு நீர்பாய்ச்சுவதற்கு செல்கின்றவர்களை யானை அடித்து கொல்கின்றது. இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகின்றவர்களை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆகையால் யானைகள் பிரதேசத்திற்கு வருவதனை தடுக்கும் நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts