மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் 21.11.2021ம் திகதி தொடக்கம் 28.11.2021 வரை குறித்த மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு காத்தான்குடி பொலிஸாரினால் தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வடக்கு கிழக்கு பூராகவும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களைக் குறி வைத்து தடையுத்தரவு வழங்கும் படலம் பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 20ம் திகதி எனக்கும் காத்தான்குடி பொலிஸாரினால் தடையத்தரவு வழங்கப்பட்டது. இதில் விசேட அம்சம் என்னவெனில் இரவு வேளையில் வீட்டுக் கதவினைத் தட்டியும் இத்தடையுத்தரவுகள் கையளிக்கப்படுகின்றன என்பதுதான். இத்தடையுத்தரவில் நான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட 12 பேரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.