ஒரு சமூகத்தினை கட்டுக்கோப்பான சமூகமாக மாற்றுவது கல்வியாகும் இந்த நிலையில் கிழக்குமாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையினை கல்வி அமைச்சர் ஆராய்ந்து அதற்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 1 ஆம் திகதிபுதன் ;கிழமை கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் 9 மாகாணங்கள் இருக்கின்றன இதில் கிழக்குமாகாணம் 9 ஆவது நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கான காரணங்களை கண்டறியவேண்டும் கிழக்குமாகாணத்தில் சமத்துவமான ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமை,பதிலீடு இன்றி இடமாற்றங்கள், அரசியல் தலையீடுகள் போன்ற காரணங்களால் கிழக்குமாகாணத்தின் கல்விநிலை சீரழிக்கப்பட்டு இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நடந்த பிரதேசமாக இருக்கின்ற அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலைப் பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது இப்பிரதேசங்கள் அதிகஸ்டப்பிரதேசங்களாக இருக்கின்றன இவ்வாறான பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களைப் பயன்படுத்தி நியமனங்களைப்பெற்று பின்னர் அரசியல் செல்வாக்கின் மூலம் வசதியான பிரதேசங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.
கல்முனையில் 150 வருடம் பழைமைவாய்ந்த பாடசாலையாக இருக்கின்ற உவெஸ்லி உயர்தரப் பாடசாலைக்கு 2020 ஆம் ஆண்டு தொழில் நுட்பக் கல்வி அபிவிருத்திக்காக 4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எழுத்துமூல ஆவணங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்று இருந்தது. அதன் பிரகாரம் வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோத்தர்கள் அங்கு வருகைதந்து அவ் வேலைகளை ஆரம்பிப்பதற்காக அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்று அகற்றப்பட்டு இருந்தது. ஆனால் கட்டிடம் அகற்றப்பட்டும் வேலை இடம்பெறவில்லை ஆகவே இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என்று தெரியாமல் உள்ளது இந்த நிலை தமிழ்ப் பாடசாலைகளுக்குத்தான இடம்பெறுகின்றது இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஆராய்ந்து இந்நிதிக்கு என்ன நடந்தது என்பதனைக் கண்டறிய வேண்டும் என்பதனை உயரிய சபையில் தெரிவிக்கின்றேன்.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டக்கல்வி அலுவலகம் அமைப்பதற்காக அத்திவாரம் இடப்பட்டவறே இருக்கின்றது. ஏனைய கோட்டங்களான சம்மாந்துறை, இறக்காமக் கோட்டங்களுக்கு நிரந்தரமான கட்டிடம் இருக்கிறது. இதனைப் பார்க்கின்றபோது தமிழ்ப்பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.
திருக்கோவில் பிரதேசபாடசாலை ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டபோதும் மாணவர்களுக்கான போதிய கட்டிடம் இல்லை அதுபோன்றுதான் சம்மாந்துறை கல்வி வலயத்தில் றாணமடு இந்து மகாவித்தியாலயம் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டபோதும் அதிலும் போதியவளம் இல்லை இவ்வாறுதான் தமிழ்ப்பிரதேச பாடசாலைகளின் நிலை இருந்து கொண்டிருக்கின்றது.