(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழினுட்ப வசதிகளுடன் விரைவு படுத்த அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இம்முறை இடம்பெற்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட பாராட்டு விருதினை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கிளைத்தலைவர்களுக்கிடையிலான உற்பத்தித் திறன் மேம்;பாட்டு மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் இன்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழினுட்ப வசதிகளுடன் வினைத்திறன்மிக்கதாக வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்தவதற்காக செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏற்கனவே விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனின் தலைமையிலான குழு தகவல் தொழினுட்ப வசதிகளைப் பயன்படுத்தி துரித சேவைகளை வழங்கும் ஏனைய மாவட்ட செயலகங்களினது சிறந்த செயற்பாடுகளையும் அனுபவங்களையும் களவிஜயம் மூலம் பெற்று வந்து இதன்போது முன்னிலைப்படுத்தியது.
இவ்வாறு வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில், இருக்கும் மனித மற்றும் பௌதீக வழங்களைப் பயன்படுத்தி தகவல் தொழினுட்ப வசதிகளின் ஊடக உச்சகட்ட வினைத்திறனான சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
உற்பத்தித் திறன் மேம்;பாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மீளாய்வுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், தகவல் தொழினுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.