தேசிய தேகாரோக்கிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டுநாள் உடற்பயிற்சி பாசறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது,
விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனசரணையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் இப்பயிற்சிப்பட்டறையானது மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் வழிகாட்டுதலின்கீழ் மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்கள் சார்பிலும் இரு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொண்டு வழிகாட்டல் (TOT) பயிற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியினை காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்று (21) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது வழங்கப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் தமது தினைக்கள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதுடன் தொடர்ச்சியாக இதனை நடைமுறைப் படுத்துவதனூடாக ஆரோக்கியமான சமுகமொன்றை கட்டியெழுப்பமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள திட்ட உத்தியோகத்தர் கே.எம்.எச். பண்டார, மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பை, உள்ளிட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக வெள்ளாவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். விவேகானந்தன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கனேஸ் விக்கிரமநாயக யோகா பயிற்றுவிப்பாளர் வை. பத்மராஜா ஆகியோர் கலந்து கொணடமை குறிப்பிடத்தக்கது.