திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 6 இளைஞர்கள் மூழ்கியபோது கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் சாதுரியத்தால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த 6 இளைஞர்களும் அக்குறணைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அக்குறணையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் சுற்றுலா சென்ற சமயம் நிலாவெளி கடலில் நீராடியுள்ளனர். அப்போது கடலில் உருவான பாரிய அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கடலில் தத்தளித்தபடி அபயக் குரல் எழுப்பிய வேளை வெளிநாட்டு சுற்றுலாத் துறையினரை எடுத்துச் செல்லவந்த படகு ஒன்றில் இருந்தவர்களும் அதற்குப் பாதுகாப்பாக வந்த பொலிஸ் ரோந்து படகில் இருந்தவர்களும் குறித்த இளைஞர்களை காப்பாற்றியுள்ளனர்.
இவ்வாறு பொலிஸ் பிரிவைச்சேர்ந்த இருவரும் கடற்படையைச் சேர்ந்த நால்வரும் மேற்படி சம்பவத்தில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொகமட் அஸ்வர் மொகமட் சாதிக் (16), எம்.எம். முபாறக்(28), மொகமட் அக்ரம் (16), மொகமட் யூசுப்(17), எம். உஸ்மான் (18), எம்.என்.எம். நுஹட்(19) என்பவர்களாவர்.
16 பேர் கொண்ட ஒரு குழுவினரே இவ்வாறு சுற்றுலா சென்று நீராடியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.