பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியுயர்வு அரபு மொழியில் இவர்களுக்குள்ள புலமைத்துவத்துக்குக் கிடைத்த கௌரவமாக கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதய கமு/ அல் – அஸ்ரப் மஹா வித்தியாலயம்) தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து. பின்னர் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியில் கற்றதன் பின்னர் இந்தியாவின் லக்னோ தாருள் உலூம் நத்வதுல் உலமா அரபுக் கல்லாசாயின் அரபு மொழி மற்றும் இலக்கிய பீடத்தில் கற்று முதலாம் நிலை அதிவிஷேட சித்தியுடன் தனது இஸ்லாமிய கற்கையை நிறைவு செய்தார். 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரும் சீர்திருத்தவாதியுமான அல்லாமா அபுல் ஹஸன் நத்வி அவர்களின் நேரடி மாணவராக பேராசிரியர் இருந்துள்ளமை விஷேட அம்சமாகும்.
1999ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் அவர்கள் 2002 இல் அரபு மொழியில் விஷேட இளங் கலைமானிப் பட்டத்தை பெற்றார். 2004 ஆம் ஆண்டு அரபு மொழியில் முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதோடு, 2012 ஆம் ஆண்டு உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியியலில் கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தார். பேராசிரியரின் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக்கு விஷேட திறமையை வெளிப்படுத்தியதற்கான திறமை விருது பல்கலைக்கழகத்தால் வழங்கி கெளரவிக்கப்பட்டையும் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய அம்சமாகும்.